புதுச்சேரி அருகே தள்ளாடிய யசோதா.. மதுபானத்தை இப்படியுமா கடத்த முடியும்.. மிரள வைத்த டெக்னிக்
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் எளிதாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்து சிலர் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். புஷ்பா பட பாணியில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவுவது நடக்கிறது. திண்டிவனம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது 2 பெண்கள் கையும் களவுமாக சிக்கினார்கள்.
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவு ஆகும். இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் எளிதாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடலூர், விழுப்புரம் மாவட்டத்துக்கு கடத்தி வந்து சிலர் விற்பனை செய்வது அதிகமாக நடக்கிறது.

மதுபாட்டில் கடத்தலை தடுக்க புதுச்சேரியில் இருந்து வரும் சாலைகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் வாகன தணிக்கை செய்கிறார்கள். இருப்பினும் மதுபாட்டில்கள் கடத்தப்படுவது குறையவே இல்லை. இதற்காக கடத்தல்காரர்கள் புதுப்புது யுக்திகளை கையாள்வது தான் காரணம்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் வருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அத்தனை வழிகளிலும் மதுபாட்டில்கள் கடத்துவது அடிக்கடி நடக்கிறது. போலீசாரிடம் மண்ணை தூவுவதற்காக புஷ்பா பட பாணியில் பல்வேறு உத்திகளை கையாள்வது தான் மதுபாட்டில்கள் சிக்குவது இல்லை.
புஷ்பா பட பாணியில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ரகசிய அறை அமைத்தும், சரக்கு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே மறைத்து வைத்தும் மதுபாட்டில்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் 2 பெண்கள் வித்தியாசமான முறையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீசார் நேற்று முன்தினம் செஞ்சி பேருந்து நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டார்கள். அப்போது 2 பெண்கள், தங்களது கைகளில் பெரிய பையுடன் தடுமாறியபடி நடந்து வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் பார்வை, நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தார்கள். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் வாயை திறக்கவே இல்லை.. இதையடுத்து பெண் போலீசார் மூலம் 2 பெண்களையும் சோதனை செய்தனர். 2 பெண்களும் முட்டளவிற்கு டவுசர் அணிந்திருந்தனர். அந்த டவுசரில் 3 அடுக்குகளில் மதுபாட்டில்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. இதை கண்டு போலீசார் ஆடிப்போனார்கள்.
விசாரணையில் அவர்கள், செஞ்சி அருகே மலையரசன்குப்பத்தை சேர்ந்த சரவணன் மனைவி சின்னபாப்பா (வயது 45), சக்கரபாணி மனைவி யசோதா (77) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்ததும், பிரேத்யேகமாக டவுசரை வடிவமைத்து பலமுறை மதுபாட்டில்களை கடத்திச் சென்று விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்ததது. இதையடுத்து சின்னபாப்பா, யசோதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 300 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 2 பெண்கள் மீதும் மதுபாட்டில்கள் கடத்தியது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications