"பாசிட்டிவ் திங்கிங்".. டீக்கடைகாரர் மகள் டூ டிஎஸ்பி.. புதுக்கோட்டையே தூக்கி கொண்டாடும் பவானியா.. செம
புதுக்கோட்டை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தன்னுடைய முதலாவது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பவானியா, டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார்... ஆனாலும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி நடைபோட துவங்கி உள்ளதாக பூரித்து சொல்கிறார்.
கடந்த 2 நாட்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் விடாமுயற்சியால் வாயடைத்து போக வைத்துள்ளார் டீக்கடைக்காரரின் மகள் பவானியா..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தை சேர்ந்தது அந்த சின்னஞ்சிறிய கிராமம்.. அதன் பெயர் கிழக்கு செட்டியாப்பட்டி.
இங்கே டீக்கடை நடத்திவருபவர் வீரமுத்து.. இவரது மனைவி வீரம்மாள்.. இந்த தம்பதியரின் மகள்தான் பவானியா... 3வது மகளாக பிறந்தவர்.. மூத்த சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
பெண்கள் படிக்கக் கூடாது என தடை போட்ட சமூகத்தில் “ஒரு அரிய சாதனை” - பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!

டீக்கடை
டீக்கடை வைத்து நடத்தினாலும், இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியே இருந்து வந்துள்ளனர். எனவே, குடும்ப பாரத்தை, தன் தோள் மீதும் எடுத்து வைத்து சுமக்க ஆரம்பித்தார் பவானியா.. ஆம், விவசாய கூலி வேலைக்கும் சென்றுகொண்டெ, தன்னுடைய படிப்பை தொடர்ந்திருக்கிறார்.... காரணம், எக்காரணம் கொண்டும் தன்னுடைய படிப்பு பாதியில் பாழாகிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடனும், அக்கறையுடனும் இருந்தார் பவானியா..

குக் கிராமம்
பவானியாவின் கிராமத்துக்கு, ஒருநாளைக்கு 2 முறை மட்டுமே பஸ் வசதி இருக்கிறதாம்.. காலை, சாயங்காலம் என 2 முறை மட்டுமே வந்து செல்லும்.. எனவே, மற்ற நேரங்களில் பஸ்ஸை பிடிக்க வேண்டுமானால், கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். இப்படிப்பட்ட குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த பவானியாதான், 12ம் படித்து முடித்து, தமிழ் வழியில் கணிதம் முடித்து, எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் போகாமல், வீட்டிலேயே படித்து, க்ரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார்.

போஸ்டிங்
இந்நிலையில், ஒரு தனியார் சேனலுக்கு பவானியா அளித்துள்ள சிறப்பு பேட்டியில் சொல்லி உள்ளதாவது: காலேஜ்வரை அனைத்தையும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்து முடித்தேன்.. TNPSC GROUP 1 தேர்தல் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தேன்.. நூற்றுக்கு 75 மார்க் போட்டிருந்தாங்க.. டெபுடி கலெக்டராக வேண்டும் என்பதற்காக படித்தேன்.. இப்போது டிஎஸ்பி போஸ்டிங் கிடைத்துள்ளது.. இந்த போஸ்டிங்கும் எனக்கு பிடிச்சிருக்கு..

கலெக்டர் ஆசை
என்னுடைய ஆசை, மாவட்ட ஆட்சி தலைவராக உயர வேண்டும் என்பதால், அந்த வேலைக்கும் நான் முயற்சி செய்வேன்.. எங்க வீட்டில் எல்லாருமே கூலி வேலை செய்பவர்கள்தான்.. நானும் கூலி வேலைக்கு சென்றுள்ளேன்.. ஆனால், காலேஜ் முடித்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்ததுமே, அந்த வேலைக்கு என்னை அனுப்பவில்லை.. எனக்கு குடும்பத்தினர் சப்போர்ட் செய்தார்கள்.. நன்றாக படிக்க சொன்னார்கள்.. ஆனால், போஸ்டிங் கிடைக்குமா? கிடைக்காதோ என்று வீட்டில் பயந்து கொண்டே இருப்பார்கள்.. நான்தான் அவர்களுக்கு எல்லாம் தைரியம் சொல்லி வந்தேன்..

முழு மார்க்
எப்போதுமே தேர்வு எதிர்கொள்பவர்கள் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்... நாம் எப்போதுமே குறைவான மார்க் எடுப்போம் என்று நினைக்காமல் முழு மார்க்கையும் எடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தால் கட்டாயம் என்னை போல் தேர்ச்சி அடையலாம். எந்த துறையாக இருந்தாலும் சரி, பணியிலும் நமக்கு கடமை உள்ளது.. சமுதாயத்திலும் நமக்கு கடமை உள்ளது.. இரு இடத்திலுமே நமக்கென்று கடமை உள்ளது.. இரு இடங்களிலுமே நமக்கான கடமையை செய்தால் போதும்.

போலீஸ்
குற்றங்களை நடைபெறாத வகையில் தடுப்பதும், அது தொடர்பான விழிப்புணர்வு தருவதும் போலீஸ் துறை என்பதால், எனக்கு அந்த துறை மீது எப்போதுமே நிறைய ஆர்வம் உண்டு.. அந்தவகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க என்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுவேன்" என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பவானியா.

முயற்சி + தன்னம்பிக்கை
இன்னும் ஒரு மாத காலத்திற்குள், டிஎஸ்பியாக பயிற்சிக்கு செல்லக்கூடிய, பவானியாவை, கிராம மக்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்களே மனம் திறந்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள்... விரைவில் ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற இவரது ஆசை நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அத்துடன், விடாமுயற்சி + தன்னம்பிக்கையின் இன்னொரு பெயராக பவானியா பெயரையும் தமிழகம் உச்சரிக்க துவங்கி உள்ளது ..!