2017 நியாபகம் இருக்கா.. அதிமுக விரைவில் ஒன்றிணையும்.. இணைக்கும் சக்தியை கூறி அன்வர் ராஜா பரபர பேச்சு
ராமநாதபுரம்: ‛‛அதிமுக விரைவில் ஒன்றிணையும். 2017 வரை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என யாரும் கனவு காணவில்லை. கட்சியில் முன்னாள் தலைவர்கள் தான் மீண்டும் தலைவர்களாக வரவேண்டும் என எதுவும் உள்ளதா?. இவர்கள் அல்லாத மற்றவர்களும் தலைவர்களாக வரலாமே. 2017 போன்று அதிமுகவில் இன்னொரு மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது'' என அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா பரபரப்பாக கூறினார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தனர். சமீபத்தில் கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தது.
இதையடுத்து நடந்த பொதுக்குழுக்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகின. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.

அதிமுக பிளவு
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வு செல்லாது என வழக்கு தொடர்ந்த ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிமுக பிளவுப்பட்டு உள்ளது.

அன்வர் ராஜா பேட்டி
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னுக்கு அதிமுகவின் முன்னாள் எம்பியாக இருந்த அன்வர்ராஜா சென்றார். முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக விரைவில் இணையும் என்று அவர் கூறினார். இதுதொடர்பாக அன்வர் ராஜா கூறியதாவது:

அதிமுக இணைந்தால்..
அதிமுக 50 ஆண்டு வரலாறு கொண்ட கட்சியாக உள்ளது. சுமார் 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சியில் இருந்துள்ளது. வரும் தேர்தலில் மீண்டும் பிரகாசமாக வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சியாக அதிமுக உள்ளது. பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இப்போது உள்ள ஆளும் கட்சிக்கோ வேறு எந்த கட்சிக்கும் கிடையாது என்பது வரும் தேர்தலில் நிரூபிக்கப்படும்'' என்றார்.

அனைவரும் ஒன்றிணைவார்கள்
இந்த வேளையில், ‛‛அதிமுகவின் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்களா?'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்வர் ராஜா, ‛‛அனைவரும் ஒன்றிணைந்து தான் ஆக வேண்டும். எல்லோரும் சேர்ந்து விடுவோம். அதற்கான நேரம் வரும்போது நடக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இணைந்தால் தான் தேர்தலில் சோதனை செய்து பார்க்க முடியும். எதுவும் முறைப்பில் நிற்காது'' என்றார்.

எம்ஜிஆர் தான் சக்தி
இதையடுத்து, ‛‛ஒன்றிணைக்க கூடிய சக்தி எதுவாக இருக்கும்'' என வினா எழுப்பப்பட்டது. அதற்கு, ‛‛ஒன்றிணைக்கும் சக்தி எம்ஜிஆர் தான் இருப்பார். மேலும் இதுதொடர்பாக முன்னணி தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும்'' என அன்வர் ராஜா சிரித்தபடி பதிலளித்தார்.

2017 ல் நடந்ததுபோல்..
மேலும், ‛‛அதிமுகவில் ஒற்றை தலைவர் வேண்டும்'' என கூறுகிறார்களே, என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அன்வர்ராஜா, ‛‛கட்சியில் முன்னாள் தலைவர்கள் தான் மீண்டும் தலைவர்களாக வரவேண்டும் என எதுவும் உள்ளதா?. இவர்கள் அல்லாத மற்றவர்களும் தலைவர்களாக வரலாமே. 2017 வரை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என யாரும் கனவு கண்டது உண்டா?. இல்லை. ஏதோ ஒன்று நடந்தது. அதேபோல் அதிமுகவில் இன்னொன்றும் நடக்கலாம். அதிமுகவில் வாய்ப்புள்ளது'' என்றார்.

அன்வர் ராஜா யார்?
முன்னதாக அதிமுகவில் இருந்து கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி முன்னாள் எம்பி அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டார். இவர் திமுவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அவர் மறுத்தார். மேலும் தற்போதைய அதிமுக குழப்பம் சரியாகும்போது அவர் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்படுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுக விரைவில் இணையும் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications