தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அனுப்பிய சிங்கள காடையர்கள்.... ராமேஸ்வரத்தில் வெடித்த போராட்டம்!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டில் மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை சிறையில் இருந்து விடுவித்த பின்னர் 5 தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அனுப்பிய சிங்கள அரசின் கொடூரத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கண்டனப் போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 8 மீனவர்கள், எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேரையும் இலங்கையின் வவுனியா சிறையில் இலங்கை அரசு அடைத்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி மன்னார் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 3 மீனவர்கள் 2-வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் 2 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதர 5 மீனவர்களுக்கும் ரூ50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம், இலங்கை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து 5 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் அப்படி விடுதலை செய்த தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு மொட்டையடித்து விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை உறவினர்களிடம் விவரித்தனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் மொட்டை அடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் இலங்கை சிறையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட ஈவு இரக்கமற்ற கொடூரங்கள் குறித்தும் இந்தப் போராட்டத்தின் போது மீனவர்கள் விவரித்தனர்.












Click it and Unblock the Notifications