தொடரும் அட்டூழியம்! நள்ளிரவில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. 16 தமிழ்நாடு மீனவர்கள் கைது!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவில், நள்ளிரவில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமேஸ்வரத்தில் நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் ஒரு குழுவினர் நள்ளிரவில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Recommended Video
அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான 16 மீனவர்களும் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள். இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை காங்கேசன்துறை மற்றும் ஊர்காவல்துறை துறைமுகங்களுக்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் பிப்ரவரி 24 ஆம் தேதிகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் செவ்வாய்கிழமை கைதான தமிழக மீனவர்களை ஊர் காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், நள்ளிரவில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications