கள்ளக்கடல் நிகழ்வு! தேவிபட்டினத்தில் நவபாஷாண கோயிலில் நடந்த சம்பவம்! பக்தர்கள் விரைந்து வெளியேற்றம்
ராமநாதபுரம்: கள்ளக்கடல் நிகழ்வு எதிரொலியாக தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாண கோயிலில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கள்ளக் கடல் எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டது. அமைதியாக இருக்கும் கடல் எந்த வித காற்று, புயல் , சுழல் இல்லாமல் திடீரென கொந்தளிப்பதுதான் கள்ளக் கடல் பாதிப்பு என்கிறோம்.

அதாவது சற்று விரிவாக சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.
கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள்.
இந்த கள்ளக்கடல் நிகழ்வு நேற்று தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அது போல் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. அது போல் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் தேவிபட்டினத்தில் நேற்று அதிகாலை முதலே கடல்நீர் வழக்கத்தை விட அலைகள் இன்று அமைதியான முறையில் கடல் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கள்ளக்கடல் நிகழ்வு கடந்த 19ஆம் தேதி அதிகாலை முதல் 20ஆம் தேதி மாலை 5.30 மணி வரை நடந்தது. இந்த நிகழ்வால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இந்த கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்லவில்லை.
இந்த கள்ளக்கடல் நிகழ்வு நேற்று முடிந்துவிட்டாலும் இதனால் தனுஷ்கோடியில் சாலை சேதம் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதை சரி செய்த பிறகுதான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். எனவே ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துவிடலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
