Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர்..காவிரியில் வெள்ளத்தால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் பெய்த கனமழையால், வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    காவிரியில் வெள்ளப்பெருக்கு.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - வீடியோ

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேட்டூர், சேலம், எடப்பாடி, சங்ககிரி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

     Due to heavy rain in Salem, water inside the houses Due to flood in Cauvery

    சேலத்தில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணன் நகர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கன மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் பாதாள சாக்கடைக்குள் புகுந்த நிலையில், தண்ணீர் செல்ல வழியின்றி இணைப்பு குழாய் வழியாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதாள சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் செல்லாத வகையிலான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள காந்திநகர், அண்ணா நகர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வீட்டில் புகுந்த மழை நீரை வெளியேற்ற வழி தெரியாமல் இரவு முழுவதும் விழித்திருந்து தண்ணீரை வெளியேற்றினர்.

    நேற்று காலை காந்தி நகர், அண்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சேலம் மாவட்டத்தில் பரவலாக நேற்றும் கனமழை பெய்தது. சேலத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 5 மணியளவில் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 24வது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 51,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு மணியளவில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதனால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 97,000 கனஅடியும், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.11 அடியாகவும், நீர் இருப்பு 93.64 டி.எம்.சியாகவும் உள்ளது.

    நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாரிகள் காவிரி கரையில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்யும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்று 3வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+