முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
சேலம்: சேலத்தில் பொது இடத்தில் முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போட்ட 2 பேரை போலீசார் பிடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்வரி மாதம் முதல் வெயில் அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிலைமை மிகவும் மோசமானது. அதன்பிறகு கடந்த சில நாட்கள் கோடை மழை பெய்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் வெப்பஅலை வீச தொடங்கி உள்ளது. வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அலை வீசி வருகிறது. அதோடு வெப்பம் என்பது 100 டிகிரியை தாண்டி உள்ளது.
குறிப்பாக சேலத்தில் வெயில் கோரத்தாண்டவமாடுகிறது. சேலத்தை பொறுத்தவரை வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. நேற்று முன்தினம் சேலத்தில் அதிகபட்ச வெப்பம் என்பது 108 டிகிரி பாரன்ஹீட்டை டச் செய்தது. இதனால் இந்தியாவில் அதிகமான வெப்பம் பதிவான நகரங்களின் பட்டியலில் 3வது இடத்தை சேலம் பிடித்தது.
இந்நிலையில் தான் வெப்ப அலை மற்றும் வெயில் காரணமாக பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் 2 பேர் சேலம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் பொதுவெளியில் முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போட முயன்றனர். இதில் ஒருவரின் பெயர் பிரபாகரன். இவர் இன்னொருடன் வந்து முட்டையை உடைத்து ஊற்றி விட்டு வெயிலில் ஆப்ஃபாயிலாக மாறும் என காத்திருந்தனர். ஆனால் ஆப்ஃபாயில் வருவதற்குள் அங்கு போலீசார் வந்தனர்.

போலீசார் ஆப்ஃபாயில் போட்ட 2 பேரையும் பிடித்தனர். பொதுவெளியில் ஆப்ஃபாயில் போட அனுமதி வாங்கினீர்களா? என கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள் பதிலளிக்காமல் வெயிலின் தாக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்த தான் இப்படி செய்கிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் 2 பேரிடமும், ‛‛பொதுவெளியில் இதுபோன்ற நடத்தையில் ஈடுபடக்கூடாது. இனி அப்படி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications