பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்க.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 115 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றபடலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகள் நிரம்பிய நிலையில் தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கர்நாடக காவிரி வழியாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒரு லட்சம் கனஅடி நீர்
தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிக கனஅடி நீர் வருகிறது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காட்டாற்று வெள்ளம்போல் காவிரி நீர் வருகிறது. ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

115 அடியை எட்டிய மேட்டூர் அணை
தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று மாலை தமிழகத்துக்கு அதிகளவில் நீர் வந்தது. மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 513 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 115.730 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 115 அடியை கடந்துள்ளது. இதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும் விரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டலாம். இதனால் மேட்டூர் நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்பதால் உபரி நீர் எந்த நேரத்திலும் முழுமையாக வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

உபரி நீர் முழுமையாக வெளியேற்றம்
இதனால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மேட்டூர் அணை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியை துவங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications