எடப்பாடியில் 'திக் திக்'.. மாயமான த.வெ.க வேட்பாளர்.. பாத்ரூம் போனவர் ஆப்சென்ட்.. எடப்பாடிக்கு லக்!
சேலம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் அரங்கேறியுள்ள சினிமா பாணி நாடகம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் அதே களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடவிருந்த அருண்குமார் மர்மமான முறையில் மாயமாகி இருப்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்!
எடப்பாடி பழனிசாமி தனது வெற்றிக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அதிகார பலத்தைப் பயன்படுத்தி த.வெ.க வேட்பாளரை மறைமுகமாகக் கடத்தியுள்ளதாக திமுகவினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

பாத்ரூம் போனவர் எங்கே? - த.வெ.க ஷாக்!
வேட்புமனுத் தாக்கலின் போது எல்லாம் சுபமாகவே முடிந்திருந்தது. ஆனால், வேட்புமனு பரிசீலனை நாளில் வந்த செய்திதான் த.வெ.க தொண்டர்களை இடியாய் தாக்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் களம் காணும் இத்தொகுதியில், அவரை எதிர்த்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உரிய பாதுகாப்புடன் தனது வேட்புமனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற தினத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் திசைமாற்றியுள்ளது.
அன்று நடந்தது என்ன?
இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
"வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை வேட்பாளர் அருண்குமார் எங்களுடன் அலுவலகத்தில் இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார். மனு தாக்கல் செய்த பிறகும் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்டு பின்னர் வீட்டிற்குச் சென்றார்.
ஆனால், அவரது வேட்புமனுவில் இரண்டு முக்கிய இடங்களில் கையெழுத்து விடுபட்டிருப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். உடனே அருண்குமாரைத் தொடர்புகொண்டு அலுவலகத்திற்கு வரவழைத்தோம். அவர் வந்து எங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த இரண்டு இடங்களில் கையெழுத்திடுவதற்குச் சற்று முன்பாக, 'இதோ கழிவறை சென்றுவிட்டு வந்துவிடுகிறேன்' என்று கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் அலுவலகத்திற்குத் திரும்பவே இல்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை."
கையெழுத்து முழுமை பெறாத காரணத்தினால், தொழில்நுட்ப ரீதியாக அருண்குமாரின் வேட்புமனு தேர்தல் நடத்தும் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதான் அவரின் மனைவிக்கும். சரியாக அவரும் கையெழுத்து போடவில்லை. முக்கியமான சில விவரங்களை வழங்கவில்லை. இதனால் அவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர்களும் சரியாக விவரங்களை கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திமுகவின் அதிரடி குற்றச்சாட்டு:
வேட்பாளர் மாயமான இந்த விவகாரத்தில் திமுக தற்போது ஒரு புதிய புகாரை முன்வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது வெற்றிக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அதிகார பலத்தைப் பயன்படுத்தி த.வெ.க வேட்பாளரை மறைமுகமாகக் கடத்தியுள்ளதாக திமுகவினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அருண்குமாரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு பின்னணியில் முழுமையாக எடப்பாடி பழனிசாமியே இருப்பதாக திமுகவினர் கூறி வருவது சேலம் மாவட்ட அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் வேட்புமனு பரிசீலனையின் போது மர்மமான முறையில் காணாமல் போனதும், அதன் விளைவாக அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் ஜனநாயக ரீதியாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications