நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகும் அதிமுக.. எடப்பாடிக்காக ரெடியான புதிய பிரசார வேன்
சேலம்: நாடாளுமன்ற தேர்தல் பிராசாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதிய கருப்பு நிற வேன் தயாராகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமி இந்த வேனில் தான் வருகை தந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்து அதற்கான செயல் திட்டத்தை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும் பாஜக இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதால், அதிமுக இதற்கு தலை அசைக்குமா அல்லது கூட்டணியில் கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்த பேச்சுக்கள் இப்போதே ஆரம்பிக்க தொடங்கி விட்டன. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் தனது தலமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு தேர்தல் வேலைகளில் இன்னும் தீவிரமாக இயங்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது. இதனிடையே, இன்று சேலம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசார வேனில் வருகை தந்தது கவனம் ஈர்த்தது. வழக்கமாக இன்னோவா காரில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி இன்று கருப்பு நிற வேனில் வருகை தந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இந்த வெனில் சென்ற படியே எடப்பாடி பழனிசாமி செய்ய உள்ளதாக தெரிகிறது. புதிய பிரசார வேனில் சேலம் மாவட்டம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- மின் கட்டணம் மூலம் மக்கள் மீது பெரும் சுமையை திமுக அரசு சுமத்தி வருகிறது.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் இலாகா இல்லாத அமைச்சர் இருக்கிறார். செந்தில் பாலாஜி வாய்ந்திறந்தால் ஸ்டாலின் ஆட்சியே போயிவிடும். ஏற்கனவே ஸ்டாலின் திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் போது காலையில் கண் விழித்து பார்க்கும் போது கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என பதறிப்போய் இருப்பதாக கூறினார். அன்றைக்கு சொனனார்... இன்று பதறிப்போய் இருக்கிறார். செந்தில் பாலாஜியை நீக்க வேண்டியதுதானே.. ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்.
எல்லா அமைச்சரும் செந்தில் பாலாஜியை ஓடிப்போய் பார்ப்பது அவருக்கு ஆறுதல் கூறுவதற்காக அல்ல... ஆட்சியை காப்பாற்றுவதற்காக.. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை யாரும் ஓடிப்போய் பார்க்கவில்லை. திமுக வளர்வதற்கு அடித்தளமாக இருந்த துரைமுருகனைக் கூட யாரும் பார்க்கவில்லை. ஆனால் 5 கட்சி போய்விட்டு வந்த செந்தில் பாலாஜியை அனைத்து அமைச்சர்களும் பார்க்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications