டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்து கெஞ்சிய பாமக எம்.எல்.ஏ.. தூக்கிவிட்ட பெண்கள்.. என்னாச்சு?
சேலம் : சேலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி, கடை ஊழியர்கள் காலில் விழுந்து பா.ம.க எம்.எல்.ஏ அருள் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்தப் பகுதி பொதுமக்களும், பெண்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள், அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது 1 மாதத்தில் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், கடை அகற்றப்படாததால், பொதுமக்களுடன் அந்த டாஸ்மாக் கடைக்குச் சென்ற எம்.எல்.ஏ அருள், கடையை மூடுங்கள் எனக் கேட்டு அங்கேயே தரையில் விழுந்து கெஞ்சினார்.
அந்த மனசுதான் கடவுள்.. 24 மணி நேரமும் லெஜண்ட் சரவணன் அருள் வீட்டில் அன்னதானம்.. குவியும் பாராட்டு

டாஸ்மாக் - பாமக
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பல லட்சம் குடும்பங்களின் பொருளாதாரம் சீரழிந்து நடுத்தெருவில் நிற்பதாகவும், வன்முறை, குற்றச் சம்பவங்களாலும், உடல் நலிவுற்றும் பலர் இறப்பதால் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாமக எம்.எல்.ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முற்றுகை போராட்டம்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்களும், பெண்களும் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த மதுபானக் கடையை மூடக்கோரி கடந்த மாதம் 7ஆம் தேதி சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை மூடுவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கம்போல் டாஸ்மாக் கடை செயல்பட்டுள்ளது.

கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ அருளிடம் டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பூட்டு போடவேண்டும் என முறையிட்டனர். உடனே அந்த பெண்களுடன் அருள் எம்.எல்.ஏ அங்குள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அப்போது அவர், டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு, காலக்கெடு நிறைவு பெறுவதால் தயவுசெய்து கடையை மூடிவிடுங்கள் என்று கடை ஊழியர்களிடம் கையெடுத்து கும்பிட்டார்.

திடீரென தரையில் விழுந்து
கடையில் இருந்த விற்பனையாளர் மற்றும் ஊழியர்களை பார்த்து உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் எனக் கூறிய அருள் எம்.எல்.ஏ, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தரையில் விழுந்து கும்பிட்டு கடையை மூடும்படி கெஞ்சினார். எம்.எல்.ஏவின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அவருடன் வந்த பெண்கள் அவரை தூக்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாமக எம்.எல்.ஏ, டாஸ்மாக் கடை முன்பாக தரையில் விழுந்து கெஞ்சியது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வருகிறது.

எழுதிக் கொடுத்தார்கள்
இதையடுத்து அருள் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், "இங்கு உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போராட்டம் செய்த போது ஒரு மாத காலத்தில் அகற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி கொடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அகற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி பெண்கள் முன்னிலையில் டாஸ்மாக் விற்பனையாளர் காலில் விழுந்து நாளையில் இருந்து கடையை திறக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தேன். கடையை வேறு இடத்தில் ஒதுக்குப்புறமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறினோம். இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தை தொடருவோம். தேவைப்பட்டால் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.