மீண்டும் மீண்டுமா? சிவப்பு சூட்கேஸில் இளம்பெண் சடலம்! ஆறு விரல் வேற இருக்கே? களத்தில் சேலம் போலீஸ்..!
சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பாலத்தின் கீழ் ட்ராவல் சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூட்கேஸ் சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொலையாளிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதனையொட்டி சர்வீஸ் சாலை செல்கிறது.

அந்த சாலையில் அப்பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, ஓய்வெடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்த சாலையின் ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் தூர் நாற்றம் வீசி வந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் மூலம் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து சங்ககிரி போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான DSP ராஜா, காவல் ஆய்வாளர்கள் காத்திகேயினி, பேபி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பாலத்திற்கு கீழ் சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 20 வயது முதல் 30 இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு தற்போது 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கலாம் எனவும், அவர் ஐந்து நாட்கள் அல்லது அதற்கு முன்பாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். அவருக்கு 6 விரல்கள் இருக்கும் நிலையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் காணாமல் போனதாக கிடைத்த புகார்களை கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் கூறுகின்றனர்.
மேலும் சர்வீஸ் சாலை வழியாக சென்ற கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் துறைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள குமரன் குடில் பகுதியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண் சடலம் கைப்பற்றப்பட்டது.
பாலியல் தொழிலாளி அந்த இளம் பெண்ணை மணிகண்டன் என்பவர் வரவழைத்திருக்கிறார். தனிமையில் இருவரும் இருந்த நிலையில், பணத்தை கேட்டதற்காக மணிகண்டன் அந்த பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் போட்டு சாலையில் வீசி சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது . அந்த அதிர்ச்சியே இன்னும் அழியாத நிலையில், சேலத்திலும் ஒரு இளம் பெண்ணின் சடலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications