சேலம் அரசு புறம்போக்கு நிலத்தில் தாசில்தார் அதிரடி? கலெக்டர் ஐயா வரணும்.. கிராம மக்கள் கோரிக்கை என்ன
சேலம்: திருப்பரங்குன்றம் மலை விவகாரமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. "அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர், சில மனிதர்கள்தான் சரியாக இருப்பதில்லை" என திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் 2 நாட்களுக்கு முன்புதான் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சேலத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை என்ன? போலீசில் தரப்பட்டுள்ள புகார் என்ன?
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே அய்யன் காட்டுவளவு என்ற இடத்தில், புகழ்பெற்ற கருப்பணார் சமுண்டீஸ்வரி கோவில் உள்ளது... இங்குதான் பன்றி, ஆடு, கோழிகள் பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காடையாம்பட்டி தாசில்தார் நாகூர்மீரான், அய்யன்காட்டுவளவு கருப்பணார் கோவிலின் ஒரு பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில், 1.63 ஏக்கர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு சமன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைக்கேள்விப்பட்ட கிராம மக்களும், இந்து முன்னணியினரும், தாசில்தாரிடம் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு தாசில்தார், "நிறுவப்பட்ட பகுதி முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தாராம்.
கோயிலில் பலியிட்டு விழா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், "கருப்பணார் சமுண்டீஸ்வரி கோவிலின் ஒரு பகுதியாக, ஆடு, கோழிகளை பலியிட்டு விழா கொண்டாடி வருகிறோம். அப்படி இருக்கும்போது, திடீரென தொழுகைக்கு இடம் ஒதுக்கப்பட்டால், அதனால் 2 தரப்பிலும் தேவையில்லாத மோதல் உண்டாகிவிடும்" என்று வாதம் செய்திருக்கிறார்கள்.
அத்துடன், போலீசில் புகார் செய்யவும் முடிவெடுத்தனர். கிராம மக்கள்சார்பில் இந்திராணி என்பவர், தீவட்டிப்பட்டி போலீசில் தந்த புகாரில், "காடையாம்பட்டி தாசில்தார் இடம் ஒதுக்கீடு செய்துள்ளது மத உள்நோக்கத்துடன் உள்ளது. இதனால் இருதரப்புக்கும் மோதல்கள் உருவாகலாம். எனவே, கோவில் வழிபாட்டு உரிமையை கிராம மக்களுக்கு மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கலெக்டர் தலையிட வேண்டும்
கருப்பணார் கோவில் வழிபாடு நடந்த இடத்தில், தொழுகைக்கு இடம் ஒதுக்கியுள்ளதாக தாசில்தார் சொல்வது, மோதலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளதால், இந்த விவகாரத்தில் நேரடியாக கலெக்டரே தலையிட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கையையும் விடுத்துவருகிறார்கள்.
இதேபோல, இந்து முன்னணி சார்பிலும், சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது தீவட்டிப்பட்டி போலீசில் புகார் தரப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சண்முகம் ஆகியோர் தந்துள்ளார்கள்.
அந்த புகார், "தாசில்தார் நாகூர்மீரான், ஜமாத் தலைவர் போல் நேரடியாக நின்று அப்புறப்படுத்தியிருக்கிறார்.. இது மத உள்நோக்கம் கொண்டதாகவும், எங்களின் மத உரிமைகளை பறிக்கும் செயலாகவும் உள்ளது.. எனவே, கோவில் இடத்தையும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளையும் மீட்டு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
உண்மைத்தன்மை என்ன?
வருடத்துக்கு 2 முறை முஸ்லிம்கள் தொழுகை நடத்த மட்டும், 15 அடிக்கு 15 என்ற அளவில், சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், யாரிடமும் ஒப்படைக்கவில்லை என்றும் தாசில்தார் தரப்பில் கூறப்படுகிறதாம். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.. இப்போதைக்கு நிறுவப்பட்ட இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் முட்டுக்கல் அமைத்திருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications