சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி.. முதல்வர் அறிவிப்பு
சேலம் கருங்கல்பட்டி செளவுண்டம்மன் கோவில் தெரு பகுதியில் வெங்கட் ராஜன் கட்டிடத்தில் மூன்று குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன. இதில் ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் கோபி.
இதில் கோபி வீட்டில் இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.

5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன
இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த கோர விபத்தில் அப்பகுதியியைச் சேர்ந்த பத்மநாபன், தேவி, கார்த்திக், ராம், எல்லம்மாள் மற்றும் ராஜலட்சுமி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் சேலம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், தாதகாப்பட்டி கிராமம், பாண்டுரங்கன் விட்டல் தெருவில் கோபி என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அப்பகுதியியைச் சேர்ந்த (1) .பத்மநாபன் (2) தேவி (3) கார்த்திக் ராம் (4) எல்லம்மாள் மற்றும் (5) ராஜலட்சுமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications