மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா.. 41 குடும்பங்களை அனாதையாக்கிவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி அட்டாக்
சேலம்: கரூர் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காத விஜய்யெல்லாம் ஒரு தலைவரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் 41 குடும்பங்களை விஜய் அனாதையாக்கிவிட்டதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கொரோனா சம்பவத்தின் போது விஜய் வெளியில் வந்திருப்பாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசும் போது அதிமுகவை அடிமைவாத ஊழல் கட்சி என்று விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக ஐடி விங் தரப்பில் பனையூர் பண்ணையார் என்றும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கும் விஜய்யும் ஒரு காரணம் என்றும் கடுமையாக சாடியது. இதன்பின் சோசியல் மீடியாவில் அதிமுக மற்றும் தவெகவினர் மோதிக் கொண்டனர்.

அதிமுக - தவெக கூட்டணி அமையாது என்பது தெளிவான பின், இரு கட்சிகளும் தங்களை ஒருவருக்கு ஒருவர் அட்டாக் செய்ய தொடங்கினர். இதையடுத்து தவெக 2ஆம் கட்டத் தலைவர்கள் தரப்பில் அதிமுக களத்திலேயே இல்லை.. அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை விஜய்யை நேரடியாக சாடி இருக்கிறார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விஜய் என்ன முக்கிய பங்கு வகிக்க போகிறார்.. அவர் வந்தால் தானே தெரியும்.. அதிமுக பொன் விழா கண்ட கட்சி.. 31 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பதை பட்டியல் போட முடியும். அதுபோல் விஜய் என்ன செய்திருக்கிறார். விஜய் நடிகர் என்பதால் ரசிகர்கள் கூடுவார்கள்.
விஜய் சிறந்த நடிகர்.. அது எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் சிறந்த அரசியல் கட்சி அதிமுக தான். 51 ஆண்டு காலமாக நாங்கள் மக்கள் பிரச்சனையை அனுபவம் மூலம் கண்டறிந்துள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மிகப்பெரியது. விஜய்யின் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம் அது. நேரடியாக கரூர் மாவட்டத்திற்கு விஜய் சென்றிருக்க வேண்டும்.
நாங்கள் உடனடியாக சென்றோம் தானே.. எங்களால் முடிந்த உதவியை செய்தோம்.. 41 குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கும்? கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்களால் ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே.. இதன்பின்னரும் கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்.. விஜய் சினிமாவில் இருந்தவரை நன்றாக சம்பாதித்தார்.
எதையும் செய்யாமல், விட்டுட்டு வந்துள்ளேன் என்கிறார்.. யாருக்காக விட்டுட்டு வந்தீர்கள்? அரசியலில் அனுபவம் வேண்டும். சாதாரண விஷயம் அல்ல. விஜய் திட்டமிடாமல் போனதால் தான் 41 குடும்பங்கள் அனாதையாகிவிட்டது. ரசிகர் பட்டாளம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் பேச முடியாது. கொரோனா காலத்தின் போது விஜய் வெளியில் வந்தாரா?
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.. அவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்தி பேசிட முடியுமா.. யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அரசாங்கம் நடத்த அனுபவம் தேவை.. அனுபவம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அது மிகப்பெரிய கஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications