என்ன இப்படி ஆகிடுச்சு! மம்தா- பிரசாந்த் கிஷோர் இடையே அதிகரிக்கும் விரிசல்.. பரபர மெசேஜ் சாட்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கடந்த சில மாதங்களாக அவருக்குப் பக்கபலமாக இருந்த பிரசாந்த் கிஷோருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் மொத்தம் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது.
இருப்பினும் 211 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பக்க பலமாக இருந்தவர் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.

மேற்கு வங்கம்
அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அவர் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆலோசகராக பணிபுரிவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், திடீரென தேர்தல் ஆலோசகர் பணியில் இருந்து விலகுவதாகக் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார் பிரசாந்த் கிஷோர். அதேநேரம் ஐபேக் நிறுவனம் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தே பணியாற்றி வருகிறது. மேற்கு வங்கத்தைத் தாண்டி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மம்தாவுக்கும் அவர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருவதாகக் கூறப்பட்டது.

திடீர் ஆலோசனை
இந்தச் சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிரசாந்த் கிஷோர் தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை இது தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது
முன்னதாக திரிணாமுல் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா, தனது சமூக வலைத்தள கணக்கை பிரசாந்த் ஐபேக் குழுவினர் தவறாகப் பயன்படுத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த ஐபேக் தரப்பு, "திரிணாமுல் கட்சி அல்லது அதன் தலைவர்களின் எந்த சமூக வலைத்தள கணக்குகளையும் ஐபேக் கையாளவில்லை. இது குறித்த சிலர் அறியாமல் பேசி வருகின்றனர். அல்லது தெரிந்தே பொய் கூறி வருகிறார்கள் என அர்த்தம். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் விசாரணை நடத்த வேண்டும்" என விளக்கம் அளித்தது.

எஸ்எம்எஸ் உரையாடல்
கடந்த சில வாரங்களாகவே, மம்தா பானர்ஜிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில ஊகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவருக்கும் இடையே நடந்த எஸ்எம்எஸ் உரையாடலை ஆனந்தபஜார் பத்ரிகா என்ற பெங்காலி நாளிதழில் வெளியிட்டுள்ளது. அதாவது வங்காளம், மேகாலயா மற்றும் ஒடிசாவில் திரிணாமுல் காங். கட்சிக்காக இனி பணியாற்ற விரும்பவில்லை என்று பிரசாந்த் கிஷோர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதற்கு மம்தா 'நன்றி' என்று மட்டும் பதில் அளித்ததாக ஆனந்தபஜார் பத்ரிகாவில் கூறப்பட்டுள்ளது.

அபிஷேக் பானர்ஜி
இதற்கிடையே மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே கூட மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. சமீபத்தில் உ.பி தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக மம்தா பிரசாரம் செய்தார். அப்போது கோவா மாநிலத்தில் திரிணாமுல் போட்டியிடும் நிலையில் அங்குப் பிரசாரம் செய்வீர்களா எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு மம்தா, "அங்கு ஏற்கனவே ஒருவர் பிரசாரம் செய்து வருகிறார். எனவே, அங்கு நான் செல்லப் போவது இல்லை. அதேநேரம் மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஆர்வத்துடனேயே உள்ளேன்" என்று தெரிவித்தார்.

மோதல்
கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி தான் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்பட்ட அபிஷேக் பானர்ஜியையே அவர், யாரோ ஒருவர் என்ற ரீதியில் குறிப்பிட்டுள்ளது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதையே குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications