பஞ்சசீலம் 2.O: ஆசியாவின் எதிர்காலத்திற்காக.. இந்தியாதான் தலைமையேற்க வேண்டும்! சிங்கப்பூர் விருப்பம்!
சிங்கப்பூர்: 1950-களில் இந்தியா மற்றும் சீனா இடையே உருவான 5 அமைதிக்கொள்கைகள்தான் பஞ்சசீலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கொள்கைகளை இக்காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.
43வது சி.டி. தேஷ்முக் நினைவு சொற்பொழிவில், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் யோங்-பூன் யோவ் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்தியா, சீனா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து 'பஞ்சசீல் 2.0' என்ற புதிய தத்துவத்தை உருவாக்கி, அதை உலக அரங்கில் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நவீன சவால்கள்
ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவும் சீனாவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சேர்ந்து, பஞ்சசீல கொள்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஜார்ஜ் யோங்-பூன் தெரிவித்தார். பரஸ்பர மரியாதை, ஆக்கிரமிப்பற்ற நிலை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல், அமைதியான சகவாழ்வு போன்ற இந்தப் புதிய கோட்பாடுகளை, செயற்கை நுண்ணறிவு, காலநிலை நெருக்கடி, பலதுருவ உலகப் போட்டி போன்ற நவீன சவால்களுக்கு ஏற்பப் புதுப்பிக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
அடிப்படைக்கொள்கைகள்
1950களில் இந்தியாவும் சீனாவும் ஏற்றுக்கொண்ட பஞ்சசீல கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், "பல துருவங்கள் நிறைந்த உலகில், 21ஆம் நூற்றாண்டுக்கு மனிதகுலத்திற்குத் தேவையான அடிப்படைக் கொள்கைகள் இவைதான். நாம் பழமையான மக்கள். நீங்கள் என்னை மாற்றவோ, நான் உங்களை மாற்றவோ முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால், நீங்கள் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர்கள்" என்றும் அவர் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
இந்தியாவின் வளர்ச்சி
இந்தியா தற்போது முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இந்த கருத்து முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், 2001இல் உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தபோது சந்தித்ததைவிட மிகவும் சவாலான உலகளாவிய சூழலை இந்தியா எதிர்கொள்கிறது என்று யோவ் சுட்டிக்காட்டினார். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன், சீனா சுமார் இருபது ஆண்டுகள் தடையற்ற வளர்ச்சியைக் கண்டு, அதன் பொருளாதாரத்தை ஏழு மடங்கு விரிவுபடுத்தியது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி கொஞ்சம் லேட்டாகவே தொடங்கியது.
சூழலை சமாளித்தல்
வர்த்தகப் போர்கள், தொழில்நுட்ப இடையூறுகள், மீண்டும் எழுந்துள்ள பாதுகாப்புவாதக் கொள்கைகள் ஆகியவை இந்தியா தவறு செய்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்துள்ளன என்று அவர் விளக்கினார். டிரம்ப் விதித்த கடுமையான வர்த்தக வரி அச்சுறுத்தல்களை, மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா தற்போது எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார். இத்தகைய சூழலைச் சமாளிக்க, நீங்கள் பலவீனத்தைக் காட்ட முடியாது, ஏனெனில் அது உங்களுக்கு முடிவாகா அமைந்துவிடும். ஆனால், நீங்கள் நெகிழ்வுடனும் நடைமுறைப்பபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தியா-ரஷ்யா உறவு
உலக ஒழுங்கில் இந்தியாவின் சமநிலை தற்போது சோதிக்கப்படுகிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி, பாதுகாப்பு உறவுகள், உக்ரைனிலிருந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு அமெரிக்காவின் முன்னுரிமைகள் மாறுவது ஆகியவை இந்தச் சமநிலைக்குச் சவாலாக உள்ளன. அமெரிக்காவின் உக்ரைன் ஆர்வம் குறைந்தால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் அமெரிக்காவுக்குப் பெரிய விஷயமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications