எகிறிய எடப்பாடி.. உதயநிதி மீது பாய்ச்சல்! 150 சினிமாக்கள் முடக்கிருச்சாம் - பேனா குறித்தும் கேள்வி
"தயாரிக்கப்படும் திரைப்படங்களை தங்கள் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். வேறு நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது." என்றார்
சிவகங்கை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த ஒரே சாதனை என்றும், உதயநிதி ஸ்டாலினால் 150 திரைப்படங்கள் முடங்கி இருப்பதாகவும் சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்ததை தொடர்ந்து அதிமுகவின் தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்தி இருக்கிறார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
வட தமிழ்நாடு மற்றும் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் தனது இருப்பை உறுதி செய்தாலும், சசிகலா குடும்பத்தினர் வசிக்கும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய ஆதரவில்லை என்றே கூறப்படுகிறது.

சிவகங்கை பயணம்
இந்த நிலையில் தான் தென் மாவட்டமான சிவகங்கைக்கு இன்று சென்றார் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அடுக்கி வரும் நிலையில் அவர் சிவகங்கை சென்றார்.

அமைச்சரான உதயநிதி
அங்கு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "மிகப்பெரிய மக்கள் விரோதத்தை ஆட்சிக்கு வந்த 22 மாதங்களிலேயே சம்பாதித்த கட்சி திமுக. இந்தியாவில் இப்படி ஒரு மக்கள் விரோதத்தை வேறு எந்த கட்சியும் சம்பாதிக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது மட்டுமே மு.க.ஸ்டாலின் செய்த ஒரே சாதனை.

150 திரைப்படங்கள்
தயாரிக்கப்படும் திரைப்படங்களை தங்கள் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். வேறு நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது. 150 திரைப்படங்கள் உதயநிதி ஸ்டாலினால் முடங்கி இருக்கின்றன. அரசியலிலும் அவர்கள் சம்பாதிக்கிறார்கள். சினிமா துறையிலும் அவர்கள் சம்பாதிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே இருக்கிறது. அது கருணாநிதி குடும்பம் மட்டும்தான்.

எழுதாத பேனா
நாங்கள் கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதாத பேனவை எங்கு வைத்தால் என்ன? 81 கோடி ரூபாய் செலவு செய்து எதற்காக பேனா வைக்க வேண்டும். நினைவு மண்டபத்திலேயே ரூ.2 கோடி செலவு செய்து பேனா வைக்கலாமே. மீதம் உள்ள பணத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு எழுதும் பேனாவுக்கு கொடுங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications