நீ பேசுற அத்தனையும் பொய்.. சிவகங்கையில் சுற்றி வளைக்கப்பட்ட ஜோடி.. கிராம மக்கள் செய்த தரமான சம்பவம்
சிவகங்கை: ரூ 1000 முன் தவணை கொடுத்தால் போதும் வட்டியே இல்லாம 1 லட்சம் கடன் வாங்கி தருகிறோம் என்று தனியார் வங்கியில் வேலை பார்ப்பது போல் நடித்து ஏமாற்றிய கணவன் மனைவியை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தது காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டிக்கு மணிகண்டன் சித்ராதேவி என்ற தம்பதி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் அடையாள அட்டையுடன் வந்துள்ளனர். அவர்கள் 1000 ரூபாயை செயலாக்க கட்டணமாக கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வாங்கி தருவதாக வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சில கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

வட்டியில்லாமல் எப்படி தனியார் வங்கியில் கடன் தருவார்கள் என்று சந்தேகம் அடைந்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் பேசியது, செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது, மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து உஷாரான மக்கள் ஐசிஐசிஐ வங்கியின் மேலாளருக்கு அழைத்து வட்டியில்லா கடன் தருவதாக வசூலிப்பதை கூறினார்கள். ஆனால் இது மோசடி என்றும் நம்ப வேண்டாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி மேலாளர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து மணிகண்டன் சித்ரா தவி தம்பதி பேசிய அனைத்தும் பொய் என்பதை அறிந்த கிராம மக்கள், குறிப்பிட்ட தனியார் வங்கி ஐடி கார்டை வாங்கி பார்த்த போது,. இரண்டு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்தது போன்ற கார்டு இருந்தது. அதையும் விசாரித்த போது, போலியான கார்டு என்பதும் தெரியவந்தது . இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த கிராம மக்கள் காவல்துறை வசம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த தம்பதி வசூலித்திருந்த 50000 ரூபாயை கிராம மக்களிடமே போலீசார் திரும்ப ஒப்படைத்தனர்.
குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம், வட்டியில்லாமல் கடன் வாங்கி தருகிறோம் என்று இதுபோல் யாராவது வந்தால் மக்கள் ஏமாற வேண்டாம்.. ஏனெனில் வங்கிகள் கடன்களை தனிநபருக்கு தர வேண்டும் என்றால், அவர்களின் சம்பளத்தை அடிப்படையாக வைத்தே தரும். நல்ல சம்பளம் வாங்குவோர், நன்கு தொழில் செய்து பேங்க் பேலன்ஸ் வைத்துள்ளவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். தனிநபர் கடன் என்பது ஒருவரின் சிபில் ஸ்கோரை அடிப்படையாக கொண்டது. அவருடைய சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் தருவார்கள்.
அதேநேரம் கடன் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக, ரிசர்வ் வங்கி அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சொத்துக்களை அடமானம் வைப்பது, தங்கத்தை அடமானம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அதுவுமே மிகவும் ஆபத்தானது. வங்கிகளில் கடன் வேண்டும் என்றால் நேரடியாக நீங்கள் வங்கியில் போய் கேளுங்கள்.. உங்கள் சம்பளம் மற்றும் தகுதி அடிப்படையில் கடன் கிடைக்கும்.. இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். தவறான இடங்களில் கடன் வாங்கி அவதிப்பட வேண்டாம்..












Click it and Unblock the Notifications