"பட்டர் சிக்கன், மீன் வறுவல்.." உலக கோப்பையில் வழங்கப்படும் உணவுகள் என்ன! ஆனா மாட்டிறைச்சி இல்லையாம்
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக். 5ஆம் தேதி தொடங்கி நவ. 19ஆம் வரை நடக்கிறது. அதற்கு முன்னதாகவே சில பயிற்சி போட்டிகள் நடைபெறுவதால் வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர்.

வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், பயிற்சி போட்டிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வரும் அக். 5ஆம் தேதி இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான்: இதற்கிடையே இந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் வந்திருந்தது. ஹைதராபாத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் அவரது அணி வீரர்களை வரவேற்கப் பலரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். தொடர்ந்து அவர்கள் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையின் போது தங்கள் சிக்கன், ஆட்டிறைச்சி மற்றும் மீன் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், அவர்களுக்குப் பட்டர் சிக்கன் மற்றும் பிரியாணி போன்ற உணவுகளும் டயட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாம். இந்த லிஸ்டில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை.
மாட்டிறைச்சி இல்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டயட் பிளான்படி மாட்டிறைச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என இருக்கும் நிலையில், மாட்டிறைச்சி இல்லாமல் உணவுகள் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளுக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் தங்கள் கார்போஹைட்ரேட் தேவைக்காக பாஸ்மதி அரிசி, போலோக்னீஸ் சாஸ் ஸ்பாகெட்டி ஆகியவற்றை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட உணவுகளைப் போலவே மற்ற டீம்களுக்கும் சிக்கன், மட்டன், மீன்கள் ஆகிய உணவுகள் வழங்கப்படும் என்றே தெரிகிறது. மட்டன் சாப்ஸ், மட்டன் வகைகள், பிரியாணி, வறுக்கப்பட்ட மீன், பட்டர் சிக்கன் மற்றும் வெஜிடபிள் புலாவ் ஆகியவை உலகக் கோப்பையில் கலந்து கொண்டுள்ள அணிகளின் டயட்டில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு: சில அணிகள் அல்லது வீரர்கள் தங்களுக்கு இந்த குறிப்பிட்ட உணவுகள் தான் வேண்டும் என முன்கூட்டியே வேண்டுகோள் விடுத்தால் அவை தயார் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மாட்டிறைச்சியில் புரதச் சத்து அதிகம் இருக்கும் நிலையில், அதை வழங்காமல் இருப்பது சரியான நடைமுறை இல்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.
எந்தவொரு விளையாட்டு தொடரிலும் உணவு என்பது முக்கிய பகுதியாகும். அதிலும் கிரிக்கெட், புட்பால் போன்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் மாட்டிறைச்சி ரொம்பவே முக்கியம். இதனால் இப்போதெல்லாம் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கான சரியான உணவுப் பொருட்களைத் தயாரிக்கச் சொந்தமாகச் சமையல்காரரையும் கூடவே அழைத்து வருகிறார்கள்..
முக்கியம்: உதாரணமாக, ஹர்திக் பாண்டியா இது போலதான் சமையல்காரரை தன்னுடன் அனைத்து போட்டிகளுக்கும் அழைத்துச் செல்வார். இதற்காக அவருக்குத் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் அல்லது அருகே இருக்கும் ஹோட்டலில் ரூம் புக் செய்யப்படுவதையும் உறுதி செய்கிறார். இதுபோல ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையான டயட்களை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications