நீங்கதான் பணக்கார கிரிக்கெட் போர்டு ஆச்சே.. கோலி, ரோகித் ஆட்டத்தை கூட லைவ் செய்ய முடியாதா?
மும்பை: விஜய் ஹசாரே டிராபியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடும் போட்டிகளை கூட பிசிசிஐ நேரலை செய்யாதது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. பணக்கார கிரிக்கெட் போர்டு என்று பெயர் பெற்றுள்ள பிசிசிஐ, ஒரு முக்கியமான உள்ளூர் போட்டியை கூட நேரலை செய்ய முடியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகிலேயே பிசிசிஐ போல் வேறு எந்த கிரிக்கெட் நிர்வாகமும் வருமானம் ஈட்டுவதில்லை. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி என்று பிசிசிஐ வருமானம் ஈட்டி வருகிறது. அதில் ஐபிஎல் மூலமாக மட்டும் ரூ.5,761 கோடியும், மகளிர் பிரீமியர் லீக் தொடர் மூலமாக ரூ.377.5 கோடியும் ஈட்டி வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை ஒப்பிடும் போது பிசிசிஐ வருமானம் உச்சத்தில் இருக்கிறது.

ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை கூட பிசிசிஐ நேரலை செய்வதில்லை. குறிப்பாக விஜய் ஹசாரே தொடர் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி டெல்லி அணிக்காகவும், ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் ஆடி வருகின்றனர். இதனால் இவர்களை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்கு பெரியளவில் குவிந்து வருகின்றனர்.
அதேபோல் கிரிக்கெட் ஸ்கோரை நேரலையில் காட்டும் Cricbuzz, Cricinfo போன்ற இணையதளங்களிலும் கூட அவர்களின் ஸ்கோரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் இதனை நேரலை செய்ய வேண்டும் என்ற நோக்கமே பிசிசிஐயிடம் இல்லை. இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
பணக்கார கிரிக்கெட் போர்டான பிசிசிஐயால் ஒரு உள்ளூர் போட்டியை கூட நேரலை செய்ய முடியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை செய்வதற்கும், ஆஷஸ் தொடர் நேரலை பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஆனால் பிசிசிஐ நேரலை எச்டி தரத்தில் கூட இல்லை என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒளிபரப்பாளர்களின் கோரிக்கைகளை கணக்கில் கொள்ளப்படும் என்றாலும், ரசிகர்களே முதன்மையாக இருப்பார்கள். அந்த நாடுகளில் சில முக்கிய தருணங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படாமலேயே போட்டிகள் நேரலை செய்யப்படும். ஆனால் பிசிசிஐ தரப்பில் போடப்படும் ஒப்பந்தத்தில், முதலீட்டை திரும்ப எடுக்க எந்த அளவிற்கும் செல்ல பிசிசிஐ தயார் என்ற நிலை இருக்கும். இதனால் பிசிசிஐ விரைவில் இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications