எப்படி போட்டாலும் அடிக்கிறான்யா.. 58 பந்துகளில் சதம்.. SMATல் சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக குறைந்த வயதில் சையத் முஷ்டாக் அலி தொடரில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரராக வைபவ் சூர்யவன்ஷி உருவாகி இருக்கிறார். அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சூழல்கள் கனிந்து வருகிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உலகம் முழுவதும் ரசிகர்களை வியக்க வைத்தது.

அதிலும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, மோகித் சர்மா உள்ளிட்டோரின் பவுலிங்கில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசியது இப்போதும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதன்பின் இந்திய யு19 அணிக்காகவும், வளர்ந்து வரும் வீரர்களுக்கான இந்திய அணியிலும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் பீகார் அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சொதப்பலான ஆடி வந்தார். இந்த தொடரில் 14, 13 மற்றும் 5 என்று வைபவ் சூர்யவன்ஷி பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் திணறினார். இந்த நிலையில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணி களமிறங்கியது.
பீகார் அணிக்காக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 34 பந்துகளில் அரைசதம் கடக்க, அதன்பின் கியரை மாற்றினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று பறக்க, 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 61 பந்துகளில் 7 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 108 ரன்களை விளாசி கடைசி வரை களத்திலேயே இருந்தார். இதன் மூலமாக பீகார் அணி 20 ஓவர்களில் 176 ரன்களை சேர்த்தது.
இதன் மூலமாக சையத் முஷ்டாக் அலி தொடரில் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் வைபவ் சூர்யவன்ஷி படைத்திருந்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் சாதனை ரன்களாகவே இனி அமையும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications