ஆஸ்திரேலியா எப்படி ஜெயிச்சது தெரியுமா? சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சொன்ன வினோத காரணம்!
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொன்ன வினோத காரணம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த இந்திய அணியும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் மோதிய இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இதில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அபாய கட்டத்தில் இருந்தது.
இந்தியா தோல்வி: ஆனால், ட்ராவிஸ் ஹெட், லபுசேன் ஆகியோர் கூட்டணி அமைத்து நிலைத்து நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த கூட்டணியை உடைத்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி எடுத்த எந்த வியூகமும் கைகொடுக்கவில்லை. சொல்லப்போனால் ட்ராவிஸ் ஹெட் தனி ஒருவராக இந்தியாவின் உலக கோப்பை கனவைத் தவிடு பொடியாக்கினார்.
தோல்விக்கான காரணம்: 43 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ச்சி அளித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா தோற்றதும் இந்திய வீரர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்கலங்கினர்.
கலங்காதீங்க! உலக கோப்பை தோல்வியால் உடைந்துபோன விராட் கோலி.. தட்டி கொடுத்து அனுஷ்கா சர்மா ஆறுதல்
ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைவரும் இருண்ட முகத்துடன் வெளியேறினர். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் ஆஸ்திரேலியாவின் வெற்றி பற்றிய கருத்துக்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாண்டவர்களின் அஸ்திரம்: கிரிக்கெட் விமர்சர்களும் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் என பல உயர் பொறுப்புகளை வகித்து இருந்த மார்க்கண்டேய கட்ஜூ, உலக கோப்பையை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், மார்கண்டயே கட்ஜூ கூறியிருப்பதாவது:- பாண்டவர்களின் அஸ்திரங்களை வைக்கும் இடமாக ஆஸ்திரேலியா இருந்தது. அது அஸ்திராலயா ஏன்று அழைக்கப்பட்டது. அவர்கள் உலக கோப்பையை ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கு உண்மையான காரணம் இதுதான்” என்று பதிவிட்டுள்ளார். மார்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications