கீழடி அகழாய்வுப் பொருட்களை கார்பன் சோதனைக்காக பெங்களூரு கொண்டு செல்ல அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை கார்பன் சோதனைக்காக பெங்களூரு கொண்டு செல்ல தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி கிராமம். இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 5 ஆயிரத்து 300 பழங்காலப் பொருள்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது.

HC allows Keeladi artifacts to be taken for carbon dating

தொல்லியல் துறை மேற்கொண்ட இந்த அகழ்வாராய்ச்சியின் 2-ம் கட்ட ஆய்வுப்பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் முடிந்தது. இப்பகுதியில் ஆய்வுகளைத் தொடர இந்திய தொல்லியல் துறை உத்தரவுப் பிறப்பிக்காததால், இங்குள்ள பொருட்களை பெங்களுருவில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்த தொல்லியல் துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால், காவிரி பிரச்சினை காரணமாக தற்போது அவற்றை பெங்களூரு எடுத்துச் செல்வது முறையாக இருக்காது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கனிமொழி மதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை பெங்களூரு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்ததனர்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) டி.ஜெகநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 2 கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதில் மாநில அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. இங்கு எடுக்கப்பட்ட பொருள்களைக்கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதைடுத்து அங்கேயே காட்சிப்படுத்த 2 ஏக்கர் நிலம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதன்படி கீழடி அருகே உள்ள பள்ளிச்சந்தைபுதூர் கிராமத்தில் 72 சென்ட் இடம் வழங்கப்பட்டது. மேலும் தேவையான உதவிகளை அளிப்போம் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் உண்மையான காலத்தை கண்டறிய கார்பன் சோதனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கார்பன் சோதனைக்கு மட்டும் தொல்லியல் பொருட்களின் மாதிரிகளை கொண்டு செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான தடை நீடிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அகழாய்வு நடைபெற்ற இடத்தை மழையில் இருந்து பாதுகாக்க தாற்காலிகமாக மூடுவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை தொல்லியல்துறை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madurai bench of the Madras high court on Tuesday extended its interim stay on removing the relics found at the archeological excavation in Keeladi village, Sivaganga district, near Madurai. However, the court has allowed the samples to be sent for carbon dating to determine the age of the articles found in the excavation.
Please Wait while comments are loading...