தனிநாடு கோரிக்கையை கைவிடுகிறது இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!
கொழும்பு: பிரிக்கப்படாத இலங்கையை ஏற்றுக் கொள்வதாகவும் தனிநாடு கோரிக்கையை கைவிடுவதாகவும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யக் கோரி சிங்கள பேரினவாதிகள் வழக்கு தொடர்ந்தனர். அதாவது வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தனி நாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இந்த தேர்தல் அறிக்கையையும், தேர்தல் முடிவையும் ரத்துச் செய்யுமாறு கோரி 5 சிங்கள பேரினவாத அமைப்புகள் சார்பில் 7 மனுக்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும் இலங்கையில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்தில்தான் தமிழரசுக் கட்சி செயல்படுவதாகவும் அம்மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் மற்றும் நீதிபதிகள் ரோஹினி மாரசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாத கருத்துகளை தெரிவிக்கவில்லை என்று உறுதிமொழி அறிக்கையை தாக்கல் செய்தால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் கனகஈஸ்வரனிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் கனக ஈஸ்வரனும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 28-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.