திருப்பத்தூரில் இது என்ன கொடுமை.. பள்ளியில் இருந்த பள்ளத்தில் தண்ணீருக்குள் மூழ்கி 2 மாணவிகள் பலி
வாணியம்பாடி: பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியள்ளது.
உயிரிழந்த மாணவிகளின் பெயர் மோனிகா, ராஜலட்சுமி என்பதாகும். இவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலுவின் மகள்கள் ஆவர். மோனிகா 5ஆம் வகுப்பும் ராஜலட்சுமி 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த முரம்பு மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தி உள்ளனர். அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை எதுவுமே வைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற மோனிகா, ராஜலட்சுமி, மணிவேல் ஆகியோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.
அவர்கள் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது மணிவேல் தண்ணீரில் இருந்து மேலே வந்து மாணவிகளை தேடினார். 2 மாணவிகளும் மேலே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறினான்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு வந்து நீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மாணவிகளை பரிசோதித்தபோது இருவரும் இறந்து விட்டதாக கூறினார்.
தகவல் அறிந்த அம்பலூர் போலீசார் 2 மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு விசாரணை மேற்கொண்டனர். படித்த பள்ளியிலேயே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளம் தோண்டியவர்களின் அலட்சியம் இரண்டு அப்பாவி மாணவிகளின் உயிர்களை பலி வாங்கியுள்ளது.
பள்ளம் தோண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி சிக்கனாங்குப்பம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications