For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#Fathersday... கடைசியில் கௌபத்துல்லா பாயும் "ஜனாஸா"வாகி விட்டார்.... ஒரு மகனின் உருக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி, ஒன்இந்தியா தமிழ் வாசகர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரசிகவ் ஞானியார் என்பவர் நமக்கு எழுதிய மடல்...

அப்பாவைப்பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் அப்பாவை எழுதும் தருணம் இப்படி வந்து கிடைக்குமென எதிர்பார்க்கவேயில்லை... செப்டம்பர் 13- 2013 ஒரு வெள்ளிக்கிழமையின் தொழுகைக்கு பிறகு அப்பா தங்குவதற்கு 6 அடிக்கு மேல் தர மறுத்துவிட்டது இந்த பூமி...

கைச் சுமைகள் எதுவுமின்றி அதிகமான இதயச்சுமைகளோடு ப்ரியமானவர்களின் மரணத்திற்காக அயல் தேசத்திலிருந்து வீடு திரும்புதலின் வலி மிகவும் கொடுமையானது. வரும் வழியிலெல்லாம் அழுகையை அடக்கி வைத்துக்கொண்டு, இயல்பாய் புன்னகைத்துக் கொண்டு, கடைசியாய் வீடு வந்து சேர்ந்து, கண்ணாடிப்பெட்டியை உடைக்கும் கண்ணீர்களை சிதறும் தருணத்தை எழுதும் வார்த்தைகள் நனைந்தே இருக்கின்றன....

என் வீட்டின் முதல் இலையுதிர்காலம் இது.....குஞ்சுகள் இரை தேட கற்றுவிட்டதால் கூட்டின் பாதையை தொலைத்து திசை மாறி சென்றுவிட்டது ஒரு பறவை...

A reader's memories on his father

மேலப்பாளையம் ஹாமீம்பள்ளி தெரு அருகே உள்ள அந்த கபர்ஸ்தானில் எந்த இடத்தில் அப்பாவிற்காக குழி தோண்டப்பட்டதோ அந்த இடத்தின் மீது அப்பா எத்தனையோ முறை உலா வந்திருக்கின்றார் அந்த தெருவின் ஒவ்வொரு மரணத்திற்கும்.....அவர் முன்நின்று செய்த எல்லாமுமே அவருக்காக செய்யப்படுகின்றது

இசக்கி முத்து வீட்டு மனைக்கும் தெற்கே
முப்பிடாதி வீட்டு மனைக்கும் வடக்கே
அபுபக்கர் வீட்டு மனைக்கும் கிழக்கே

இப்படித்தான் தான் விற்கின்ற வாங்குகின்ற மனையின் பத்திரம் எழுதுவதற்காக என்னை எழுத வைத்து எழுத்துப் பயிற்சி கற்று தந்திருக்கின்றார் அப்பா.... சென்ட் - தச்சு - சதுர அடி போன்ற வார்த்தைகள் எல்லாம் அப்பா மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாயின.... அதுபோலத்தான் இந்த ஆறடியின் வலியும்...

"அவர் வாங்கி விற்ற
சதுர அடிகள் எல்லாம்
பத்திரங்களாய் இருக்கிறது..
அவர் தூங்கி விட்ட ஆறடி தவிர"

எதிர்பாராத திருப்பங்களுடன்தான் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கின்றது ஆனால் மரணம் மட்டும்தான் திருப்பத்தில் விழவைத்து வாழ்க்கையை நகர்த்துகிறது... எவ்வளவு கவனமான பயணமாக இருந்தாலும் நிச்சயமாய் ஒவ்வொருவரும் அந்த திருப்பத்தை சந்தித்தே தீரவேண்டும்...

நான் வெகுதூரத்தில் இருக்கிறேன் என்பதை அவர் உணரக்கூடாது என்பதற்காகவே அவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டால் கூட, எந்த ஊரில் இருந்தாலும், அவர் முன்னால் வந்து நின்றுவிடுவேன்.. சென்ற முறை ஊருக்கு செல்லும்பொழுது கூட "அடுத்த மாதம் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி விட்டுதான் கிளம்பினேன்.. ஆனால் அதற்குள்ளாகவே அவர் பயணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது

ஒவ்வொரு பிரிதலிலும் அவர் விழிகள் ஏக்கத்துடன்தான் இருக்கும்...சுறுசுறுப்பான எப்பொழுதும் பரபரப்பாய் உழைத்துக்கொண்டிருக்கும் அப்பாதான் என் நினைவில் எப்பொழுதுமே நிற்கின்றார்... அப்படிபட்டவரை அப்படி படுக்கையிலையே படுத்திருக்கும் நிலையை எதிர்கொள்ளவே எனக்கு தர்ம சங்கடமாய் இருக்கும்....

"அப்பா நான் கிளம்புறேன்பா" என்று அவர் விழி பார்த்து விடைபெறும்பொழுதெல்லாம் "அப்படியா கிளம்பிட்டியா?..இன்னும் கொஞ்சம் இருக்கமாட்டாயா?" என்ற ஏக்கம்தான் அவர் விழிகளில் தெரியும்.. "இன்னும் இரண்டு நாளில் சரியாகிவிடும்" என்றுதான் என்னிடம் கடைசியாக பேசினார்... அந்த இரண்டு நாட்களைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

சைக்கிளில் சுற்றிய காற்று அவர்.. ஊரின் ஒவ்வொரு தெருக்களிலும் அவர் சைக்கிள் டயர் பதியாத அச்சுக்களே இருந்திருக்காது. அவரது சைக்கிள் யாத்திரைதான் சொந்தமாய் ஒரு வீட்டை எழுப்பியது. தனது சைக்கிளின் சுழற்சியில்தான், எங்களது வறுமையை பஞ்சராக்கினார்..

"உன் சைக்கிள் சுழற்சி தான்
எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள்
சைக்கிள் பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான்
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா!"

அவரது சைக்கிள் பயணித்த அம்பைரோடு - அவரது உடலை வைத்திருந்துவி.எஸ்.டி பள்ளி - அவரை அடக்கம் செய்த ஹாமீம்பள்ளி தெரு கபர்ஸ்தான்.....இப்படி அவருடைய இறுதி பயணத்தில் அவரை சுமந்து செல்லுகின்ற பாதைகள் எல்லாமே அவருடைய ஞாபகத்தை மீட்டிக்கொண்டேயிருந்தது...

அவரை அடக்கம் செய்த கபர்ஸ்தான் வழியாக அப்பாவோடு சைக்கிளில் பெல் அடித்துக்கொண்டே, அப்பாவின் சைக்கிளின் பின்புறம் பயணித்துக்கொண்டே சிறுவயதில் எத்தனைமுறை பயணித்திருக்கின்றேன்.

அவரை கடைசியாய் மண் துகள்கள் மறைக்கும்முன் "கடைசியாக முகத்தை பார்க்கிறவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பக்கீர்ஷா சொன்னபொழுது நானும் பார்த்தேன்... ஆனால் எனக்கு அது கடைசியல்ல... உடலை மூடும் சக்தி மட்டுமே பக்கீர்ஷாக்களுக்கு உண்டு... நினைவுகளை அல்ல...

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மீண்டுவந்தபொழுது கூட அந்த பரபரப்பிலும் ஒரு மஞ்சப்பை எடுத்து வந்து தனது வைத்தியத்திற்கு ஆன செலவை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.... அவருக்கு அதில் ஒரு கர்வமான பெருமை தான் யாரையும் நம்பியில்லையென்று... கடைசி வரையிலும் எங்களுடைய கைகள் உயர்ந்ததேயில்லை...

சென்றமுறை ஊருக்குவந்தபொழுது கூட கொஞ்ச நேரம் பக்கத்தில் அமர்ந்து பேசலாம் என நினைத்தேன்.. "ப்ளீஸ் அப்பா நீங்க மட்டும் செத்து போகக்கூடாது என்னப்பா" என கெஞ்சும் தங்கமீன்கள் செல்லம்மாவைப்போலவே விளையாட்டுத்தனமாய் இருந்துவிட்டேன் என் அப்பாவுக்குமா மரணம் வந்து விடப் போகிறதென்று...

பேச வேண்டியதை ப்ரியமானவர்களிடம் அப்பொழுதே பேசிவிடுங்கள்.. காலம் தாழ்த்தினால் மறுபடியும் அவர்களுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமலேயே போய்விடக்கூடும்...

"காலி மனைகளில் எல்லாம்
வீட்டை நிரப்பினார்.
இப்பொழுது அவரில்லாமல்
வீடு காலிமனையாகிவிட்டது.."

"கௌபத்துல்லா பாய் இருக்கார்ல அவர் தெருதான்".... "கௌபத்துல்லா பாயோட பையனா....?" இப்படி கௌபத்துல்லா பாய்என்பதையே லேணட்மார்க்காக ஏற்படுத்தி வைத்திருந்தார்.... அப்படி அழைத்த ப்ரியமானவர்கள் எல்லாம் கடேசி நேரத்தில் "ஜனாஸாவை தூக்குங்க" என்று சொல்லிய தருணத்தில் நான் நின்றிருக்க கூடாதுதான்.... கடைசியில் கௌபத்துல்லா பாயும் ஜனாஸாவாகிவிட்டார்...

"வீடு...நிலம் ...
பணம் ...சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப்
பிரித்து விடவில்லை
விதிவிலக்கானது மரணம்"

ரேசன் அட்டையில் இருந்து அப்பாவின் பெயர் நீக்கப்பட்டாலும் எப்பொழுதுமே என் பாஸ்போர்ட்டின் முதற் பெயராக அழைக்கப்பட்டு கொண்டே இருப்பார் ஒவ்வொரு விமான நிலையத்திலும்..

மரணத்திற்கு வாழ்க்கையை முடிக்கின்ற சக்தி இருக்கிறதே தவிர உறவுகளை அல்ல...

"கன்னிமாரா குளத்திற்கும் கிழக்கே
வி.எஸ்.டி பள்ளிவாசலுக்கும் வடக்கே
ஹாமீம் பள்ளி தெருவுக்கும் மேற்கே
அப்பா புதைக்கப்பட்டுள்ளார்...
என்னுடைய நினைவுகளின்
எல்லா திசைகளிலும்
அவர் விதைக்கப்பட்டுள்ளார்..."

அவர் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதெல்லாம் அவரது அறைக்கு சென்று சிறிது நேரம் உற்று கவனித்து மூச்சு விட்டுக்கொண்டுதானிருகின்றாரா என்று உறுதிபடுத்திக்கொண்டுதான் வெளியில் செல்லுவேன்... இப்பொழுதும் அவர் இறந்து விட்டது நான் நடுநிசியில் கண்ட ஒரு கனவேயன்றி வேறில்லையென அவரது அறையில் இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என்றுதான் சமாதானப்பட்டுகொண்டிருக்கின்றேன்...

எனக்கு தெரியும்
எவர் வீட்டிலிருந்தும் கடுகு கிடைக்காது என்று!
இறுதிநாள் நம்பிக்கையில்தான்
இதயம் சமாதானப்படுகிறது..!

English summary
One of our readers has recalled the memories on his late father.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X