சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளியா? ஒரு வழக்கறிஞர் எழுப்பும் 50 கேள்விகள்
சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி என்பவர் 50 கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய பதிவை அப்படியே தருகிறோம் படியுங்கள்.
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது" என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் சந்தேகங்களும் இவையே.

ராம்குமார் என்ற நபரை கொலையாளி என்று காவல்துறை கைது செய்துள்ளது. உண்மைக்கும் இவர்தான் குற்றவாளி எனில் கண்டிப்பாக இவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணையின் நகர்வுகளைக் காணும் பொழுது உண்மையிலேயே ராம்குமார்தான் கொலையாளியா என்ற சந்தேகம் எழுகிறது.
அப்படியே ராம்குமாருக்கும் ஸ்வாதியின் கொலைக்கும் தொடர்பு இருப்பின் அவர் மட்டுமே இந்த கொலையில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பது எந்தளவு உண்மை? கொலைக்கு காரணமாக கூறப்படும் ஒருதலை காதல் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்றா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்த இவ்வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க நான் எடுத்துள்ள முயற்சி இந்த பதிவு.
இந்த வழக்கைப் பற்றி முகநூலில் நான் எழுதுவதால் எந்தவொரு இனத்திற்கோ மதத்திற்கோ ஆதரவானவன் அல்லது எதிரானவன் என்று யாரேனும் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு வழக்கறிஞரான நான் பொதுப்படையாக, வெளிப்படையாக எழுப்பும் கேள்விகள் இவை.
ராம்குமார் கைதாவதற்கு முன்:
ஜூன் 24 அன்று காலை நேரம் சுமார் 6.40 மணி அளவிற்கு ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலையை பார்த்த நேரடி சாட்சிகள் பலர் அங்கு இருந்துள்ளனர். ஒருவரும் கொலையாளியைப் பிடிக்க முயலவில்லை. கொலையாளி தப்பித்து விடுகிறான். சுமார் இரண்டு மணி நேரங்களாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கிடந்த ஸ்வாதியின் சடலம் காவல்துறையின் சம்பிரதாயங்கள் முடிவடைந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நொடி கொலையாளியின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. ஸ்வாதியின் செல்போன் காணவில்லை என்று தெரிய வருகிறது. காதல், குடும்ப பிரச்சனை, அலுவலக பிரச்சனை போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
தொழில்நுட்பங்களின் உதவிகளோடு (சமூக வலைதளங்கள், சி.சி.டி.வி, செல்போன் டவர்) தேடுதல் நடக்கிறது. சி.சி.டி.வி.யில் பதிவான இருவேறு உருவங்கள் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. இரண்டு படங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன என்று அவற்றைப் பார்த்தாலே நமக்கு புலப்படுகின்றது. கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று ஒரு அரிவாள் கண்டெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிலால் மாலிக் என்பவர்தான் கொலையாளி என்ற தகவல் பரவுகிறது. கொலைக்கு காரணம் லவ் ஜிகாத் என்று புரட்சி எழும்ப கோஷம் இடப்படுகிறது. பிலால் மாலிக்கை காவலில் எடுத்து விசாரித்ததாக தெரியவில்லை. மாறாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. பேட்டி அளித்தவர் ஸ்வாதியின் நண்பர் பிலால் என்பது தெரியவருகிறது. ஸ்வாதியின் தோழி ஒருவரும் அவரது குடும்பத்தாரும் ஸ்வாதியை யாரோ சில காலமாக பின்தொடர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். கொலையை நேரில் பார்த்த ஒருவர் ஸ்வாதி கொலையாவதற்கு சில நாட்கள் முன் யாரோ ஸ்வாதியை ரெயில் நிலையத்தில் வைத்து அறைந்ததாகவும் ஆனால் அறைந்த நபர் கொலை செய்தவர் இல்லை எனவும் கூறுகிறார்.
ஸ்வாதியின் முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. ஸ்வாதியின் தந்தை விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணவேண்டாம் என்று முதலமைச்சருக்கு மனு செய்கிறார்.
ராம்குமாரின் கைது:
ஜூலை 1 அன்று நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையின் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பண்பொழில் கிராமத்தில் ராம்குமார் என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கைது செய்யப்படுகிறார். அவர்தான் கொலையாளி என்று புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. ராம்குமார் சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டிற்கு அருகில் ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருந்ததாகவும் அவருடன் தங்கி இருத்த நடேசன் என்பவர்தான் அடையாளம் காண்பித்து ராம்குமாரை கைது செய்ய உதவியதாகவும் கூறப்படுகிறது. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றுவிட்டதாகவும், ராம்குமார் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ஒருதலைக்காதல் தான் கொலைக்கான காரணம் என்றும் காவல்துறை சார்பாக பேட்டிகள் வெளியாகின்றன. ராம்குமாரின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியின் செல்போனும் ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராம்குமார் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். வழக்கறிஞர் ஒருவர் ராம்குமாரின் சம்மதம் இன்றி அவர் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்தது பெரும் சந்தேகத்திற்கு இடமாகி பின்னர் அந்த வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகுகிறார். ராமராஜ் என்ற வழக்கறிஞர் ராம்குமாரை சந்தித்து ராம்குமாரின் கைதில் நிறைய மர்மங்கள் இருப்பதாக பேட்டியளிக்கிறார்.
வழக்கின் சூழ்நிலைகள் இப்படி இருக்க எனக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்னவென்றால்,
1) சி.சி.டி.வி.யில் பதிவான அந்த உருவம் மட்டுமே கொலையாளியை நெருங்குவதற்கான கருவியாக கருதப்பட்ட நிலையில் அந்த உருவம் ராம்குமார்தான் என்று எதன் அடிப்படையில் போலீசார் முடிவெடுத்தனர்?
2)சிகிச்சையில் இருந்த ராம்குமாருக்கு சரிவர மயக்கம் தெளியாத பொழுதே வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கொலைக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே குற்றவாளி என்றும் போலீஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது. வேறு யாரும் ராம்குமாருக்கு உடந்தை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தெளிவான விசாரணை நடத்தாமலேயே ஒரு விசாரணை கைதியை குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் அறிவித்ததன் காரணம் என்ன?
3) கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் ஜூலை 2ஆம் தேதியே ராம்குமாரால் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடிந்தது? ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராம்குமார் நன்றாக பேச 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தது உண்மை எனில் நிஜமாகவே வாக்குமூலம் பெறப்பட்டதா?
4) முறையாக அடையாள அணிவகுப்பு நடத்தாமல் ராம்குமாரின் புகைப்படத்தை கொலையாளி என்று கூறி ஊடகங்களில் வெளியிட்டது ஏன்?
5) சி.சி.டி.வி.யில் உருவம் பதிவான அதே இடத்தில் ராம்குமாரை கொண்டு போய் நடக்க வைத்து உருவ ஒற்றுமை சோதனை நடத்தப்படாமல் தெளிவற்ற அந்த உருவம் ராம்குமார்தான் என்று ஆணித்தரமாக போலீசார் அறிவித்தது எப்படி?
6) ராம்குமார்தான் கொலையாளி என்று போலீஸார் அறிவித்த பிறகு கொலையை நேரில் பார்த்த நேரடி சாட்சியங்கள் யாரேனும் ராம்குமார்தான் ஸ்வாதியை வெட்டினார் என்று உறுதி தெரிவித்தனரா?
7) ஸ்வாதி யாரோ ஒருவன் அவரை பின் தொடர்வதாக கூறினார் என்றும் அந்த நபரை தான் சில முறை பார்த்துள்ளதாகவும் அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார். பிடிபட்ட ராம்குமார்தான் பின் தொடர்ந்த அந்த நபர் என்று அந்த தோழி ஊர்ஜிதப்படுத்தினாரா?
8) ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனும் சுவாதியின் வீடும் அருகிலேயே உள்ளன. கொலை நடந்த இரண்டு நாட்களிலேயே சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த நபரின் முகத்தை ஸ்கெட்ச் செய்து சுவாதியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் காட்டி விசாரித்துள்ளனர். அதே மேன்ஷனிலும் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். அங்கே மூன்று மாதங்களாக தங்கியிருந்த ராம்குமாரின் மேல் யாருக்குமே முதலில் சந்தேகம் வரவில்லையே, அது ஏன்?
9) அந்த தெருவில் தினமும் நடமாடிய ராம்குமாரை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம். உணவருந்த செல்லும் இடம், செல்போன் ரீசார்ஜ் என்று ஒரு சில இடங்களில் பரிச்சியம் கூட ஆகியிருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு கூடவா அது ராம்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை?
10) ஒரே அறையில் ராம்குமாரோடு தங்கி இருந்த நபர் காலம் தாழ்ந்து இது ராம்குமார்தான் என்று போலீசாரிடம் தெரிவிக்க என்ன காரணம்? ராம்குமாரை பிடிக்க உதவியதாக கூறப்படும் அந்த நபர் தற்பொழுது எங்கே என்ற கேள்விக்கு போலீசார் மௌனம் சாதிப்பது ஏன்?
11) ராம்குமார் சென்னையில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர் என்று தொலைக்காட்சிகளில் ஓயாமல் அறிவிட்டிருந்த போதும் ஏன் அந்த கடையில் உள்ள யாரும் ராம்குமாரின் மேல் சந்தேகப்படவில்லை. அந்த துணிக்கடையின் பெயர் என்ன? அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்தார்களா? ஆனால் தற்போது ராம்குமார் சென்னையில் வேலையே பார்க்கவில்லை என்று தெரியவருகிறது.
12) தமிழகம் முழுவதும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியான ஸ்வாதி கொலை வழக்கும் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் என்ற படமும் அவரது கிராமத்திற்கும் சென்றிருக்கும் அல்லவா? அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அவர்களில் ஒருவருக்கு கூடவா ராம்குமாரின் மேல் சந்தேகம் வரவில்லை?
13) கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்னர் சுவாதியை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்போது சுவாதி அடித்தவரிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு ஸ்வாதி அமைதியாக ரயில் ஏறி சென்றதாகவும் அதை நேரில் பார்த்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அடித்த நபர் கலராக இருந்தார் எனவும் கொலை செய்து விட்டு ஓடியது அன்று அடித்த நபர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் ஸ்வாதியை அத்தனை பேர் முன்னிலையில் அடித்தது யார்? அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை போலீஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன்? தமிழ்செல்வனிடம் முறையான போலீஸ் விசாரணை நடைபெற்றதா? அவர் கொலையாளியை நேரில் பார்த்ததாக தெரிவித்திருப்பதால் அவரை அணுகி ராம்குமார்தான் அந்த கொலையாளியா என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா?
14) ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு அதன் காரணமாக ராம்குமார் ஸ்வாதியை ஒருதலையாக காதலித்து, அதனை ஏற்க ஸ்வாதி மறுத்தும் பின் தொடர்ந்து காதலை கூற, ஸ்வாதி கோபமடைந்து தனது உருவத்தை விமர்சித்து திட்டியதால் ராம்குமார் அவரை வெட்டி கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் முகநூல் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தகைய குறுஞ்செய்திகள் போலீசாரால் கையகப் படுத்தப்பட்டனவா?
15) குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் பொதுப்படையாக மட்டுமே இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். குறிப்பிட்டு சொல்லும் படியான பின்னணி இல்லாத ராம்குமார் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தைரியமாக ஸ்வாதியை பின் தொடர்ந்து காதலை தெரிவித்ததாக கூறும்பொழுது, ஏன் அவர் தன் காதலை ஒரு முறையேனும் குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கவில்லை?
16) ஸ்வாதியின் முகநூலில் ராம்குமாரின் குறுஞ்செய்திகள் இருந்திருப்பின் போலீசார் முன்னரே ராம்குமாரின் முகநூல் பக்கத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ராம்குமாரின் புகைப்படங்கள் அதில் "public"ஆக இருக்கின்றன. அப்படி பார்த்திருந்தால் அப்பொழுதே ராம்குமாரை பிடித்திருக்கலாமே? எல்லா கோணங்களிலும் விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளது என்று அறிவித்த போலீஸார் இதை எப்படி தவரவிட்டனர்? அல்லது தவரவிட்டது போல நடிக்கின்றனரா?












Click it and Unblock the Notifications