தமிழகத்தில் 39 ஆண்டுகள் கழித்து! அமைச்சரவையில் பிராமணர்! தவெக வெங்கட்ரமணனுக்கு குவியும் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் 39 ஆண்டுகளுக்கு பிறகு, பிராமண சமூகத்தை சேர்ந்த வெங்கட்ரமணன் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இது அச்சமூக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு எந்த துறை கிடைக்கும் என்ற ஆர்வமும் அவர்களுக்கு தொற்றிக் கொண்டது.
தவெகவின் பொருளாளராக உள்ள 48 வயதுடைய வெங்கட்ரமணன்தான் தற்போது அமைச்சராகியுள்ளார். இவர் பம்மலில் குடியிருக்கிறார். இவர் ஒரு வழக்கறிஞர். எம்.காம், எம்பிஏ, எம்.எல். படித்துள்ளார். இவர் மயிலாப்பூர் தொகுதியை சேர்ந்தவர்.

இவர் விஜய்க்கு நீண்ட நாள் நண்பராம். தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் வெங்கட்ரமணனும் ஒருவர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர் தற்போது அமைச்சராகியுள்ளார். அதாவது 1952 ஆம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ராஜாஜி முதல்வரானார். கடந்த 1954 ஆம் ஆண்டு காமராஜர் முதல்வரான போது பிராமண சமூகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
அதன் பிறகு 1967 ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் பிராமண சமூகத்தை சேர்ந்த எச்.வி.ஹண்டே சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு பிராமணரான ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் அவரது அமைச்சரவையில் அதே சமூகத்தினர் இடம் பெறவே இல்லை. அதன் பிறகு 1987-க்கு பிறகு 39 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில் பிராமணரான வெங்கட்ரமணன் இடம் பெற்றுள்ளார். முதல்வரான ஜெயலலிதாவிடமும் காவல் துறை, உள்துறை போன்றவைகள் இருந்திருக்கின்றன.
ஆனால் அவர் அமைச்சராக இருந்ததில்லை. எம்ஜிஆர் 1982 இல் முதல்வரான போது ஜெயலலிதா, அதிமுகவில் இணைந்தார். அவரது வளர்ச்சி அபரிமிதமானது. கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரானார். பிறகு ராஜ்யசபா எம்பியானார். எம்ஜிஆர் மறைந்ததும் 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்தது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது ஹண்டேவுக்கு பிறகு வெங்கட்ரமணன் அமைச்சராகியுள்ளார். இவர் நடந்து முடிந்த தேர்தலில் 70,070 வாக்குகள் பெற்று வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலு, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை தோற்கடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications