For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓங்கிக் குரல் கொடுத்த உலகத் தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கத் தீர்மானம் : கருணாநிதி

Google Oneindia Tamil News

America's resolution is disappointing: Karunanidhi
சென்னை: ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காத் தலைமையில் ஐந்து நாடுகள் பரிசீலனைக்காக கொண்டு வந்திருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

''ஈழத் தமிழர் பிரச்னை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டு வரவிருக்கும் தீர்மானம், பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்குமென்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆணையக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று விரிவாக கள ஆய்வு நடத்தியதோடு பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களுடைய துன்ப துயரங்களை விசாரித்தறிந்து, வழங்கிய அறிக்கை உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்து போன நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்குத் தேவையான அரசியல் உறுதி இலங்கை அரசுக்கு இல்லை என்றும், இலங்கை அரசு தொடர்ந்து சர்வாதிகார திசையில் பயணித்து வருகிறது என்றும், நவநீதம் பிள்ளை தனது அறிக்கையிலே தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்துங்கூட, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் நவநீதம் பிள்ளையின் ஆய்வறிக்கையில் உள்ள நுட்பமான சிந்தனைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கைச் சிங்கள அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கிடும் வகையில் வரைவுத் தீர்மானம் அமைந்திருக்கிறது.

தற்போது அமெரிக்காவின் வரைவுத்தீர்மானத்தில் அரசியல் தீர்வு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி அதிகாரமில்லாத ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதல்ல; ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எது என்பதனை அவர்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உலகச் சமுதாயம் செய்ய முன் வந்தால்தான், அவர்களுக்கு நீதி கிடைத்ததாகச் சரித்திரம் பதிவு செய்யும். ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வித ஆக்கப் பூர்வமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அதைப்போலவேதான் இந்தத் தீர்மானமும் இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்டு எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிடப்போவதில்லை.

எனவே "டெசோ" சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டபடி இந்திய அரசே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் உகந்த வழியாக இருக்க முடியும்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும்; ஈழத்தமிழர்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை, அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில்; ஏற்கனவே சிலநாடுகளில் நடத்தியதைப் போல, "பொது வாக்கெடுப்பு" நடத்தப்பட வேண்டுமென்றும்; தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்கொண்டு வந்து நிறைவேற்றுவதே ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்திலே வாழும் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் நிறைவளிக்கக் கூடிய காரியமாக அமையும்" என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanithi has said that the America's resolution against Srilanka at the UNHRC is disappointing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X