For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 70 தொகுதிகளா? அன்புமணி ராமதாஸ் திட்டவட்ட மறுப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிரூட்டப்பட்டிருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 70 இடங்களையும், தே.மு.தி.க.வுக்கு 113 இடங்களையும் ஒதுக்க பாரதியஜனதா முன்வந்திருப்பதாகவும், மீதமுள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பாமக நிலைப்பாடு இதுதான்..

பாமக நிலைப்பாடு இதுதான்..

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பா.ம.க.வின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. ‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையையும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். அ.தி.மு.க., தி.மு.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையலாம்'' என்று மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை தெரிவித்துள்ளார்கள். அதே நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை நானும் வலியுறுத்துகிறேன்.

எங்களுக்கே தொகுதி ஒதுக்கீடா?

எங்களுக்கே தொகுதி ஒதுக்கீடா?

2016 தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுக்களை, அதன் தலைமையிலான கூட்டணியில் இணைய முன்வரும் கட்சிகளுடன் பா.ம.க. தலைமை தான் நடத்தும். மற்ற கட்சிகளிடம் தொகுதிகளை நிற்க வேண்டிய நிலையில் பா.ம.க. இல்லை. பா.ம.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் வலிமையுடன் தமிழகத்தில் வேறு கட்சிகளும் இல்லை.

தன்னம்பிக்கை இருக்கு...

தன்னம்பிக்கை இருக்கு...

பா.ம.க. தலைமையிலான கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டாலும் மகிழ்ச்சி என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. தனித்து நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெறும் வலிமையும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் பா.ம.க.வுக்கு மட்டுமே உண்டு.

இதில் எந்த ஐயமும் தேவையில்லை.

இதில் எந்த ஐயமும் தேவையில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலை பா.ம.க. தலைமையில் மாற்று அணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 15.02.2015 அன்று சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டு, அன்று மாலை நடந்த மண்டல மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பா.ம.க.வின் இம்முடிவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மக்கள் அமோக ஆதரவு

மக்கள் அமோக ஆதரவு

முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசியிருக்கிறேன். 8 மண்டல மாநாடுகளை சிறப்பாக நடத்தியுள்ளோம். அம்மாநாடுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் பங்கேற்று பா.ம.க.வுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மதுஒழிப்பு மாநாடுகளை எனது தலைமையில் நடத்தியுள்ளோம். இம்மாநாடுகளில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

வரைவு தேர்தல் அறிக்கை

வரைவு தேர்தல் அறிக்கை

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவுத் தேர்தல் அறிக்கையை பா.ம.க. தான் முதலில் வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறேன். உழவர்கள், மீனவர்கள், தொழில்துறையினர் ஆகியோரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், பா.ம.க. ஆட்சி அமைந்தவுடன் அவற்றை நிறைவேற்றித் தருவதாக சமூக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு வழங்கியுள்ளேன். அடுத்தகட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட மேலும் பல பிரிவினரை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து சமூக உடன்பாடு செய்து கொள்ள உள்ளேன்.

நாம் விரும்பும் சென்னை

நாம் விரும்பும் சென்னை

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் - செயல்திட்டங்களால் கவரப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரை அனைத்து வசதிகளும் நிறைந்த, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத நகரமாக மாற்றுவதற்காக ‘நாம் விரும்பும் சென்னை' என்ற கொள்கை ஆவணத்தை பசுமைத்தாயகம் சார்பில் தயாரித்து வெளியிட்ட நான், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட 22 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன். சென்னைக்கான இந்த செயல்திட்டத்தால் கவரப்பட்ட மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோடி பெண்கள் ஆதரவு

கோடி பெண்கள் ஆதரவு

பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த முடியும் என்று நம்பும் கோடிக்கணக்கான பெண்கள் பா.ம.க.வை ஆதரிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு வகைகளில் ரகசிய பேரங்களை நடத்தி வரும் கட்சிகளை போன்றது அல்ல பாட்டாளி மக்கள் கட்சி.

அதிமுக, திமுக ஆட்சிக்கு முடிவு

அதிமுக, திமுக ஆட்சிக்கு முடிவு

தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மீது மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். இந்த இரு கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

அது பா.ம.க.வால் மட்டுமே சாத்தியமாகும் என உறுதியாக நம்புகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மீது பா.ம.க. நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக மக்களும் பா.ம.க. மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் பா.ம.க மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குலைக்க முடியாது; பா.ம.க. ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியாது; பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தடுக்க முடியாது என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

திமுக, அதிமுக அல்லாத...

திமுக, அதிமுக அல்லாத...

2016 தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ம.க.வின் முடிவை ஏற்றுக்கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பா.ம.க. தயாராக இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை பா.ம.க. தான் தலைமையேற்று நடத்தும். பா.ம.க. தான் கூட்டணிக்கு தலைமையேற்கும். இது உறுதி. எனவே, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் தவறாக செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
CM Candidate of PMK Dr Anbuamani Ramadoss has denied that the reports on PMK Seat sharing with BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X