• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூக விரோதிகளின் களமாகிவிட்ட டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள்!

By R Mani
|

தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்ளாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் கொழுந்து விட்டு எரியத் துவங்கி விட்டன.

சனிக்கிழமை கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 99 வயது தாயார் நேரடியாகவே களத்திற்கு வந்து அங்குள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டித்தில் கலந்து கொண்டதில் உத்துவேகம் பிடிக்கத் துவங்கின இந்த போராட்டங்கள். அடுத்த நாள் வைகோவே நேரடியாக களத்திற்கு வந்த போது விவகாரம் ரணகளமானது. டாஸ்மாக் கடையை மூட மறுத்த போலீசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் இருதரப்புக்குமான தள்ளுமுள்ளாக மாறியது. திடிரென்று இந்த போராட்டம் வன்முறையாக மாற, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. இது வைகோவின் கண் முன்னாலேயே நடந்தது. டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மது புட்டிகளை தெருவில் போட்டு உடைக்கத் துவங்கினர். சிலர் பெட்டி, பெட்டியாக இருந்த பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே வானத்தை நோக்கி பல ரவுண்டு கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் சுட்டனர். இவற்றையெல்லாம வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைகோ வழக்கம் போலவே தனது ஆக்ரோஷமான பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

Anti socialist elements in Prohibition protests

திங்கட் கிழமை சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அக்கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கியது, மதுவிலக்குக் கோருபவர்களின் போராட்ட வடிவம் முற்றிலும் மாறி விட்டதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. இந்த கடையை முற்றுகையிட்ட மாணவர்கள் திடீரென்று கற்களை கடை மீது வீசத் தொடங்கினர். கடைக்குள் புகுந்து விட்ட சில மாணவர்கள் நூற்றுக்கணக்கான மதுப் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இரண்டு மாணவர்கள் மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டனர். மதுக்கடையை சூறையாடிய மாணவர்கள் கையில் கிடைத்த பாட்டில்களுடன் ஹாரிங்கடன் சாலையில் ஓடியதை செய்தியாளர்கள் உட்பட அனைவரும் பார்த்தனர். ஒரு மாணவர் கையில் விஎஸ்ஓபி பிராண்டி, முழு பாட்டிலை, அதன் பளபளக்கும் கவருடன் கையில் பிடித்துக் கொண்டு ஒடுகிறார், அவரை சீருடை அணியாத ஓரு போலீஸ்காரர் பிடித்துக் கொண்டு போகிறார். இது பல தொலைக் காட்சிகளில் திரும்ப, திரும்ப காட்டப்பட்டது.

"இந்த ஒரு கடையில் மட்டும் 60,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மது பாட்டில்கள் சூறையாடப் பட்டன. ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரி மாணவர்கள் கோஷங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் மற்றோர் பக்கம் கடையை மாணவர்கள் சூறையாடிக் கொண்டிருந்தனர். இந்தத் தொகையை எப்படிச் சரி கட்டுவதென்று தெரியவில்லை. நிர்வாகம் இதனை எங்கள் ஊழியர்கள் தலையில் கட்டினாலும் ஆச்சரியமில்லை. நாங்கள் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்," என்று என்னிடம் கூறினார், சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றும் ஒரு அதிகாரி. தமிழகத்தில் பல இடங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இது வாடிக்கையாகி விட்டதென்றும் அவர் கூறுகிறார்.

Anti socialist elements in Prohibition protests

இடதுசாரிகளைத் தவிர்த்து, இன்று டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் அனைத்து அரசியல் கட்சிகளிலும், டாஸ்மாக்கால் அனுதினமும் பலனடைந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ‘திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாக என்று எந்த கட்சியாக எடுத்துக் கொண்டாலும், இன்று டாஸ்மாக்கால் அந்தக் கட்சிகளின் உள்ளூர் தொண்டர்களில் சிலர் ஏதாவதொரு ரூபத்தில் பலனடைந்து கொண்டுதான் உள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள 20,000 க்கும் மேற்பட்ட பார்களில், அஇஅதிமுகவினரத் தாண்டி, இந்தக் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கும், பங்குதாரார் என்ற முறையிலோ அல்லது மறைமுகவாகவோ ஏதாவது ஒரு ரூபத்தில் டாஸ்மாக்கால் பலனடைந்து கொண்டுதான் உள்ளனர். இது அரசாங்கத்துக்கும் தெரியும், இந்த கட்சிகளுக்கும் தெரியும்," என்று மேலும் கூறுகிறார் அந்த டாஸ்மாக் சூப்பரவைசர்.

இந்தப் போராட்டங்களைத் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆங்காங்கே சிலர் தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு இடத்தில் பார் நடத்த அந்த கட்டிட உரிமையாளர் ‘ஆட்சேபணையில்லை' என்ற சான்றிதழை வழங்க வேண்டும். ஒருவருக்கு முதலில் இப்படி ஒரு சான்றிதழைக் கொடுத்துவிட்டு, பின்னர் கட்டிட உரிமையாளர் அதனை வாபஸ் பெற்றதும், பாதிக்கப்பட்ட பார் உரிமையாளரே போராட்டத்தைத் தூண்டி விடுகிறார். அதாவது பார் நடத்த எனக்கு உரிமை தராத கட்டடத்தில் டாஸ்மாக் கடையும் இருக்கக் கூடாது என்பது பார் உரிமையாளரின் திட்டம். இதுபோல தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Anti socialist elements in Prohibition protests

இவற்றையெல்லாம் கூறும் அதே வேளையில் தமிழகத்தில் இன்று நடைமுறையில் உள்ள மதுக் கொள்கையை நாம் ஆதரிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் நடப்பது என்ன? மதுவை அரசே விற்பனை செய்வது என்பது கூட ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் அதனைத் தாண்டி மதுவை இன்று அரசாங்கமே ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது, அதாவது புரமோட் செய்து கொண்டுள்ளது. இதுதான் சிக்கல். இலக்கு வைத்து மது விற்பனையை நடத்துவதும், இலக்கை எட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தமும் தெருத்தெருவாக டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் போய் முடிந்துள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில், அய்யம்பாக்கம் என்ற ஏரியாவில் மட்டும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஏழு டாஸ்மாக் கடைகள் உள்ளன. கேகே நகரில் சிவன் பார்க்கைச் சுற்றி மட்டும் 15 டாஸ்மாக் கடைகளும் பார்களும் உள்ளன. இவையல்லாமல் பிரைவேட் பார்கள் தனி. இந்த அவலம் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. டெல்லி போன்ற நகரங்களில் ஒரு கடைக்கும் மற்றோர் கடைக்கும் மான இடைவெளி குறைந்தது ஒன்றரை கிலோமீட்டராவது இருக்கும். நிலைமையை கட்டுப்படுத்த கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், விற்பனை நேரத்தை மட்டுப்படுத்தலாம். டாஸ்மாக் கடை ஊழியர்களே அதிக விலை வைத்து சரக்கு விற்கும் கேவலத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை மூடுவதென்பது தற்போதய சூழ்நிலையில் அறவே சாத்தியமற்றது.

Anti socialist elements in Prohibition protests

பொருளாதாரம் உலகமயவாதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே, பெரியாரும், அம்பேத்காரும் சொன்னது நினைவுகூறத்தக்கது. ‘கடுகளவு அறிவுள்ளவன் கூட பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கமாட்டான்' என்றார் பெரியார். ‘பூரண மதுவிலக்கு என்று பேசுவது பைத்தியாக்காரத்தனம்' என்றார் அம்பேத்கார். இவையெல்லாம் உலகப் பொருளாதாரம், நாடுகள் என்ற எல்லையைத் தாண்டி பின்னிப் பிணைவதற்கு முன்பே சொல்லப்பட்ட நிதர்தன மொழிகள்.

இன்று தமிழகத்தில் நடக்கும் சம்வங்களைப் பார்க்கும் போது நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள் இவை.

இன்று பூரண மதுவிலக்கு வேண்டி போராடும் களத்தில் நிற்கும் திருவாளர் பொதுஜனத்துக்கு வேண்டுமானால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் வைகோவுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ, பாஜகவுக்கோ, எல்லோரையும் விட திமுக தலைவர் கருணாநிதிக்கோ இது தெரியாதது அல்ல. தெரிந்தே இவர்கள் இன்று மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இன்று டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்கள் சமூகவிரோதிகளின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றது. இது முழுவதும் சமூக விரோதிகளின் கைகளுக்குப் போய் விட்டால், இந்த போராட்டங்களை நசுக்கி ஒடுக்குவது போலீசுக்கு சுலபமானது. இலக்குகள் மட்டுமல்ல, இலக்குகளை அடைவதற்கான வழிகளும் மிகவும் முக்கியமானவை என்றார் மஹாத்மா காந்தி. போராட்டக் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகள் இவற்றை நினைவில் கொள்ளுவது மிகவும் முக்கியமானது.

வாக்கு வங்கி அரசியலுக்காக இன்று அனைத்துக் கட்சிகளும் இன்று பூரண மதுவிலக்கு கோஷத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளன. தேர்தல் கூத்துகள் முடிந்து ஆட்சி கைக்கு வந்ததும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இதே மதுவைத்தான் கையிலெடுக்கப் போகின்றன, இன்று தொண்டை கிழியக் கத்தும் அத்தனை கட்சிகளும்.

இப்போதைய போராட்டங்களில் வன்முறை கூத்தாடுவதை ஒரு நாகரிக சமூகம் அனுமதிக்க முடியாது. தேர்தல்களுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் அனைத்து எதிர்கட்சிகளும் இன்று இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டுள்ளன. வரும் நாட்களில் இந்தப் போராட்டங்கள் இன்னும் வேகம் பிடிப்பது நிச்சயம். மக்களும் உணர்ச்சி வேகத்தில் கடையை உடைக்க கட்டையோடு கிளம்புவார்கள். ஆனால் தொடரும் இந்த வன்முறையை அரசு முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சின்னாபின்னமாகும் ஆபத்து உள்ளது. இதுவே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கப் போதுமானது.

தற்போதய தேவை பூரண மதுவிலக்கல்ல, மாறாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு, மது விற்பனை நேரக் குறைப்பு, சரியான விலைக்கு விற்பது, பார்களை மூடுவது போன்ற முறைப்படுத்தப்பட்ட மதுக்கொள்கைதான். இதைச் செய்தாலே போதும், இன்றைய சுய அரசியல் லாப மதுவிலக்குப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த!

ஆர்.மணி

 
 
 
English summary
The author of the article says that the recent protests for prohibition have caused for violence and anti social elements took over the protests for their sake.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X