ஜெ.சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த திடீர் தடை !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜெயலலிதாவிற்கு நோய் தொற்று ஏற்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது ஜெயலலிதா நலமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Banned to hold pooja at apollo hospital

இதனிடையே ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக மகளிர் அணி சார்பில் அப்பல்லோ முன்பு தினமும் விதவிதமான பூஜைகள் நடத்தப்பட்டன. சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு முன்பு பூசணிக்காய் உடைப்பது, தேங்காய் உடைப்பது, குங்கும பூஜை, குத்து விளக்கு பூஜை, மண்சோறு சாப்பிடுவது, அக்னி சட்டி, கோமாதா பூஜை, சூலாயுத பூஜை என்று விதவிதமான பூஜைகள் நடத்தி வந்தனர். சென்னை, புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் கோயிலில், மிருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர்களும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள், பால்குடம் என தொடர் பிரார்தனைகள் நடத்தி வந்தனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் அவ்வப்போது அன்னதானமும் அப்பல்லோ முன்பு நடைபெற்று வந்தது. ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையின் வெளியே தொடர் பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தனர். சிறப்பு பூஜை நடத்தப்படும் சமயத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், ஆம்புலன்சு வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், அப்பல்லோ மருத்துவமனை நுழைவு வாயிலில் பூசணிக்காய் உடைப்பதற்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் பூஜை செய்வதற்கு பயன்படுத்தி வந்த இடத்தில் தற்போது ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் முன்பு அ.தி.மு.க.வினர் கூட்டம் கூடாமல் இருக்கவும் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Banned to hold pooja at in front of apollo hospital, The Tamil Nadu CM has been in Apollo Hospital critical unit since September 22 ever since she had complained of fever and dehydration.
Please Wait while comments are loading...