உளுந்தூர்பேட்டையில் கண் அயர்ந்த டிரைவர்.. நேரா மரத்தில் மோதிய வேன்.. 6 பேர் நசுங்கி பலி.. பலர் காயம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது வாழைப்பந்தல்.. இங்குள்ள 20 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, வேன் மூலம் சுற்றுலா சென்றிருந்தனர். தரிசனம் முடித்துவிட்டு, இன்று அதிகாலை திருச்சி - சென்னை ஜி.எஸ்.டி சாலையில் இவர்கள் வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் அருகே வேன் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.. இதனால், சாலையில் இங்குமங்கும் பாய்ந்த வேன், திடீரென சாலையின் ஓரத்திலிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த எதிர்பாராத விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்... மேலும் சிலர் வேனில் சிக்கி கொண்டனர்.
படுகாயம்: இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த 13 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இவர்கள் வந்த வேன், மோதிய வேகத்தில் மரத்திலேயே சிக்கி கொண்டுவிட்டதால், அதனை வெளியே எடுக்க முடியவில்லை.. எனவே, வேனின் முன்பக்கத்தை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து, வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து: இந்த விபத்து குறித்த தகவலறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஐபிஎஸ் நேரில் வந்து பார்வையிட்டார்... இந்த விபத்துக்கு காரணம், வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டியிருக்கலாம் என்றும் அதனாலேயே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். எனினும், 6 பேரை காவு வாங்கிய இந்த விபத்து, தமிழக மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவலறிந்ததுமே திருநாவலூர் போலீஸார் விபத்தில் இறந்தவர்களை முண்டியம்பாக்க அரசு மருத்துவமனைக்கும், காயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் விபத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் நடந்தது.. அதனால், இறந்தவர்கள் உடலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எடுத்து செல்லுமாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சடலங்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.












Click it and Unblock the Notifications