For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணி.. விஜய்காந்த் மெளனம் சாதிப்பது ஏன்?: தட்ஸ்தமிழுக்கு தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜெயலட்சுமி

தமிழக அரசியலில் இப்படியும் ஒருவரா? என்று வியக்க வைப்பவர் தமிழருவி மணியன். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தவராயினும் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த காங்கிரஸை இல்லாது ஒழிப்பதே தன் முதல் பணி என பம்பரமாய் சுழன்று வருபவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பை வெளிப்படுத்தி வருபவர் தமிழருவி மணியன்..

தமிழகத்தில் மது ஒழிப்புக்கான களத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து கரம் கோர்த்து களம் அமைத்து போராடுகிறவர் தமிழருவி மணியன். லோக்சபா தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த, திமுக- அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணி அமைக்க பாரதீய ஜனதா தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவற்றை கொண்ட மாற்று அணிக்காக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறவர்.

லோக்சபா தேர்தல் கூட்டணி முயற்சிகள், கொள்கைசார் முரண்பாடுகள், அவற்றுக்கான நியாய தர்க்கங்கள், தமிழக- தேசிய அரசியல் நிலைமைகள் குறித்து நம்மிடையே விரிவாக பகிர்ந்து கொண்டார் தமிழருவி மணியன். 'தமிழ் ஒன் இந்தியா' செய்தியாளர் ஜெயலட்சுமிக்கு தமிழருவி மணியன் அளித்த சிறப்பு பேட்டி:

பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளது?:

பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளது?:

கேள்வி: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளது?. பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

தமிழருவி மணியன்: மதிமுக, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் நிச்சயம் இடம் பெறும். பாமக உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். பாஜக அணியில் பாமக நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

விஜய்காந்த் வசம் 13% வாக்குகள்:

விஜய்காந்த் வசம் 13% வாக்குகள்:

கேள்வி: தேமுதிகவை இழுக்க பலரும் முயலுகிறார்கள். திமுக பலமாக முயல்கிறது. வாசன் மூலமாக காங்கிரஸ் கூட முயற்சிக்கிறது. பாஜக பக்கம் கொண்டு வர மேற்கொள்ளப்படும் உங்களது முயற்சிகள் எந்த அளவில் உள்ளது?

தமிழருவி மணியன்: தேமுதிக அனைத்து கட்சியினரும் தங்களின் கூட்டணியின் இணைக்க விரும்புவதன் காரணம், தேமுதிகவிற்கு என 10 சதவிகித வாக்கு வங்கி உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக உடன் இணைந்து 10 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேர்தலில் தனித்து நின்று 13 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த வாக்கு வங்கிக்காகத்தான் எல்லோரும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதிமுகவிற்கு தனியாக 30 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. இடது சாரிகளுடன் இணைந்து 33 சதவிகிதமாக அது உயர வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது:

காங்கிரஸ் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது:

எனவே அதிமுகவை விட கூடுதலாக வாக்குகளைப் பெறவேண்டுமானால் மதிமுக, தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினை விட அதிக வாக்கினை பெற முடியும். அதிமுகவிற்கு அடுத்தபடியாக வாக்கு வங்கியுள்ள திமுகவும் அதனால்தான் தேமுதிகவை இழுக்க முயற்சிக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சமேனும் மீடேறுவோம் என்ற நம்பிக்கையில்தான் விஜயகாந்தினை அந்த கட்சி நாடுகிறது. இப்படி பாஜக, திமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியினரும் விஜயகாந்தினை கூட்டணியின் இணைக்க முயற்சி செய்வதினால்தான் அவர் தற்போது மவுனம் சாதிக்கிறார்.

விஜயகாந்தை 3 முறை சந்தித்துப் பேசியுள்ளேன்:

விஜயகாந்தை 3 முறை சந்தித்துப் பேசியுள்ளேன்:

விஜயகாந்தினை இதுவரை நான் மூன்றுமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். திமுக கூட்டணிக்கு சென்றால் ஏற்படும் இழப்புகளைப் பற்றியும், காங்கிரஸ் கூட்டணிக்குச் சென்றால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றியும் கூறியுள்ளேன். அவரும் பொறுமையாக கேட்டுக்கொண்டார். பிப்ரவரி 2ம் தேதி உளுந்தூர் பேட்டையில் நடைபெற உள்ள மாநாட்டில் அவர் கூட்டணி பற்றி அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜனவரி 31ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை பேசி தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பாமக வருமா?:

பாமக வருமா?:

கேள்வி: ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணைவது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளதே?. அன்புமணி ராமதாஸ்- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்று கூறப்படுகிறதே?

தமிழருவி மணியன்: இது ஊடகங்களில் ஏற்படுத்தப்படும் பரபரப்பு. ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை தைலாபுரத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற விருப்பம்தான் மேலோங்கியிருக்கிறது என்பதே உண்மை. எந்த சூழலிலும் திமுக, அதிமுக உடன் பாமக கூட்டணி சேராது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதிமுகவின் வெற்றிக்கு உதவுகிறீர்களா?:

அதிமுகவின் வெற்றிக்கு உதவுகிறீர்களா?:

கேள்வி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக, நீங்கள் முயற்சிக்கும் 3வது கூட்டணியான பாஜக-தேமுதிக-மதிமுக ஆகியவை உருவானால் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்று கருதுகிறீர்கள்?. இது மறைமுகமாக அதிமுகவின் வெற்றிக்குத் தானே உதவும்?

தமிழருவி மணியன்: நிச்சயமாக இல்லை. நாங்கள் ஒரு மாற்று அணியைத்தான் உருவாக்குகிறோம். இது மூன்றாவது அணியில்லை. மூன்றாவது அணி என்றால் அது மக்கள் மத்தியில் நீர்த்துப் போய்விடும். காங்கிரசுக்கு எதிரான மாற்று அணியை மட்டுமே நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதிமுகவிற்கு ஆதரவாகவும், அந்த கட்சியின் வெற்றிக்கும் உதவ வேண்டும் என்று விரும்பியிருந்தால் நேரடியாக அதிமுகவிற்கு ஆதரவிலான அணியை உருவாக்கியிருப்பேனே?.

காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்:

காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்:

கடந்த ஒன்பதரை ஆண்டுகாலம் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவேதான் அதற்கு சமமான பலமுள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

எப்படி சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்ற அதற்கு மாற்றாக உள்ள அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் கட்சிகளை ஒன்றிணைத்து திமுகவை வீட்டுக்கு அனுப்பினோமோ அதே போல காங்கிரஸ் கட்சியை அகற்றிட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு வருகிறது இந்த பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக கூட்டணி.

தமிழகத்தில் பாஜக அணி 15 இடங்களில் வெல்லும்:

தமிழகத்தில் பாஜக அணி 15 இடங்களில் வெல்லும்:

இது திமுக, அதிமுக அல்லாத அணி. 15 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். ஒரு சமயம், மிகப்பெரிய மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் மோடிதான் பிரதமராகவேண்டும் என்று விரும்பினால், அதிமுகவை விட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும். இது வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பாமகவிடம் நெருக்கம் இல்லையே...:

பாமகவிடம் நெருக்கம் இல்லையே...:

கேள்வி: மது விலக்கு விஷயத்தில் தமிழகத்தில் பாமக தான் அதிகமான குரல் கொடுக்கிறது. இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் அவர்களுடன் இணைந்து போராடக் கூடாது?

தமிழருவி மணியன்: பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து சில முக்கிய போராட்டங்களில் இணைந்து போராடியுள்ளோம். இப்போது பாஜக கூட்டணியில் கொண்டு வருவதற்காகவும் பேசி வருகிறேன்.

இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி...:

இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி...:

கேள்வி: அடிப்படையில் நீங்கள் காங்கிரஸ்காரர்.. காந்தியவாதி.. ஆனால் காந்தியை சுட்டுப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் மதவாத அமைப்பினருக்காக அரசியல் பணி செய்கிறீர்கள்.. முரண்பாடாக தெரியவில்லையா?

தமிழருவி மணியன்: இது முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்தவர்கள், காங்கிரசை தூக்கி நிறுத்த முடியாதவர்கள் என்மீது பரப்பும் குற்றச்சாட்டு. காந்தியை கொலை செய்த கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. நானும் அதை மறுக்கவில்லை. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி காங்கிரஸ் கட்சியின் தவறுகளை போர்வை போட்டு மூடப்போகிறீர்கள்.

இஸ்லாமியர்களின் காயத்தை ஆறவிடாமல் செய்து...:

இஸ்லாமியர்களின் காயத்தை ஆறவிடாமல் செய்து...:

பாஜகவினை இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாக கூறி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் இணையவிடாமல் செய்யப் போகிறீர்கள்? கோத்ரா சம்பவத்தையும், அதற்குப் பின்னர் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான கலவரத்தையும் யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த சம்பவம் நடைபெற்று 12 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. வாழ்நாள் முழுவதும் அதையே சொல்லி சொல்லி இஸ்லாமியர்களின் காயத்தை ஆறவிடாமல் செய்து காங்கிரஸ் கட்சி வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்:

காந்தி இந்து- முஸ்லீம் ஒற்றுமையைத்தான் விரும்பியிருப்பார். நானும் அதேபோலத்தான் இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காகத்தான் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சிறு பிரச்சினை உருவானாலும் தமிழகமே கொந்தளிக்கும். நானோ, வைகோவோ, மருத்துவர் ராமதாஸோ, விஜயகாந்தோ பிரிவினையை தூண்டுபவர்கள் அல்ல. எங்களுடைய நோக்கம் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். சுயநலம் சார்ந்த அரசியல்வாதியல்ல நான். காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் இவர்களை முன்னுதாரணமாக கொண்டுள்ளவன் நான்.

இந்த கேள்விகளுக்கு நாளை பதில்...

இந்த கேள்விகளுக்கு நாளை பதில்...

தேர்தலுக்குப் பின் பாஜக, அதிமுக கூட்டணி சேர்ந்தால்.., காங்கிரஸ், லோக்சக்தி, பாஜக ஆதரவு என நிலை தடுமாறுகிறீர்களே..., பாஜக ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டது...?, மோடிக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு தெரிவிப்பது ஏன்?, ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன் ஆதரவு தர மறுக்கிறீர்கள்...?. இது போன்ற கேள்விகளுக்கு தமிழருவி மணியன் அளித்த பதில்கள் நாளை வெளியாகும்.

(>> சிறுபான்மையினர் வாக்குக்காக ஜெயலலிதா வேடமிடுகிறார்: தமிழருவி மணியன் பேட்டி- தொடர்ச்சி..)

English summary
Gandhiya Makkal Iyakkam leader Tamilaruvi Manian is trying for a grand alliance to defeat Congress and DMK in Tamil Nadu. He is working for a alliance between BJP, Vijaykanth's DMDK and PMK, besides Vaiko's MDMK. In an exclusive interview to Oneindia Tamil he shares his efforts to form an alternative alliance in Tamil Nadu by projecting Narendra Modi as PM candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X