For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயிர்கள் வாடும் போது ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கலாமா? கேட்கிறார் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரிப் பிரச்சினையில் கடைபிடித்து வரும் மவுனத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடைபிடித்து வரும் அணுகுமுறை பொறுப்பற்றது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் வறட்சியால் நெற்பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். கர்நாடகத்தின் இந்த சுயநல மற்றும் பிடிவாத அணுகுமுறை இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சம்பா பயிர்கள் முற்றிலுமாக கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Cauvery issue: Dr.Ramadoss urges Central government order to Karnataka

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி செப்டம்பர் மாத இறுதி வரை கர்நாடகம் வழங்க வேண்டிய 45 டி.எம்.சி. தண்ணீரை வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர், இடர்ப்பாட்டுக் காலங்களில் கர்நாடகத்தின் தேவைக்குப் போகத் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என்று கூறியிருக்கிறார். கர்நாடக அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இடர்ப்பாட்டுக் காலங்களில் கிடைக்கும் நீரை விகிதாச்சார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இதை ஏற்க கர்நாடக அரசு மறுக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்திற்கு கர்நாடகா 37டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டியிருந்தது. அந்நேரத்தில் கர்நாடக அணைகளில் 74.23 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அதைக் கொண்டு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு தராமல் அந்த நீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொண்டது.

கர்நாடக அணைகளில் நேற்றைய நிலவரப்படி 56.99 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதிலிருந்து தமிழகம் கோரும் தண்ணீரை திறந்து விடலாம். ஆனால், அவ்வாறு செய்ய கர்நாடக அரசு மறுப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. அதற்காக ஜனவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 28 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1457 கனஅடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 12,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தண்ணீரின் அளவு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் குறைந்து வருகிறது. அணை நீரில் இன்னும் 15 டி.எம்.சி. நீரை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதால், இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பற்றாக்குறை அளவில் தண்ணீர் திறக்க முடியும்.

கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் சம்பா பயிர்கள் கதிர் விடுவதற்கு முன்பாகவே கருகும் ஆபத்து இருக்கிறது. இந்த ஆபத்தான நிலையை மத்திய அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால் தமிழக விவசாயிகளுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும் மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை... பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 16 மாதங்களாகியும் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் இல்லாத சூழலில் அதன் பணிகளை செய்வதற்காக உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவாலும் எந்த பயனும் இல்லை.

கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆணையிடப்பட்ட போதிலும், அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக கருதினால், கர்நாடக முதலமைச்சரை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும்.

ஆனால், கர்நாடக அரசியல் கணக்குகளைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு மவுனம் காக்கிறது; அதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்கிறது.

இந்த ஒரு சார்பு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். காவிரிப் பிரச்சினையில் கடைபிடித்து வரும் மவுனத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதேபோல், இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா கடைபிடித்து வரும் அணுகுமுறை பொறுப்பற்றதாகும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடன் பிரதமரை சந்தித்து முறையிடுவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இனியாவது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்பி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal katchi president Dr.Ramadoss has urged the Central government to order the Karnataka for release the Cauvery water in Delta district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X