For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதிக்கக் கூடாது: மோடிக்கு பன்னீர்செல்வம் கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

Cauvery issue: O. Pannerselvam writes to PM Modi
சென்னை: காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதி உத்தரவை கர்நாடகம் தொடர்ந்து மீறி வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்திடம் இருந்து நீரினைப் பெறக் கூடிய தமிழகத்தின் உரிமைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது மேகதாது பகுதியில் இரண்டு நீர்த் தேக்கங்களை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு வகுத்துள்ளது. இது மிகப்பெரிய விதிமீறலாகும்.

மேகதாது பகுதிக்கு அருகே நீர்த் தேக்கங்களை கட்டுவது குறித்து கர்நாடக அரசு ஏற்கெனவே வகுத்த திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டு சென்றார்.

மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது பகுதியில் தன்னிச்சையாக புனல் மின்சாரத் திட்டப் பணிகளை நிறைவேற்றக் கூடாது எனவும், தேசிய புனல் மின்சாரக் கழகத்தின் மூலமாவோ அல்லது வேறு மத்திய மின் உற்பத்தி அமைப்பின் வழியாகவோ சிவசமுத்திரம், மேகதாது, ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய இடங்களை ஒருங்கிணைத்து மின் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், காவிரி ஆற்றுப் படுகையில், தமிழக அரசின் அனுமதியின்றி எந்த புனல் மின் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என கர்நாடகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற நிரந்தர கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தும் வரை காவிரி வடிநிலப் பகுதிகளில் கர்நாடக அரசின் எந்தத் திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கூறியிருந்தார்.

இப்போது மேகதாது பகுதியில் இரண்டு நீர்த் தேக்கங்களை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மேகதாதுவில் கூடுதல் நீரை சேகரிக்கவும், சுமார் 2,500 ஏக்கர் வனப் பகுதியை இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு மீறும் செயலாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் இரண்டு நீர்த் தேக்கங்களை அமைப்பது என்பதே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பானது, கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதியன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் 1956-ன் படி நடுவர் மன்ற இறுதி உத்தரவானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உத்தரவைப் போன்று இப்போது நடைமுறையில் உள்ளது.

மேலும் சிவசமுத்திரம், மேகதாது பகுதிகளில் புனல் நீர் மின்திட்டப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவானது விசாரணையில் உள்ளது. எனவே, நீர்த் தேக்கங்களைக் கட்டுவது, புனல் நீர் மின் திட்டப் பணியை மேற்கொள்வது என அனைத்து விஷயங்களும் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ளது.

மேகதாது பகுதியில் நீர்த் தேக்கங்களை கட்டுவது தொடர்பாக, தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளை ஆராயும் கர்நாடகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த, அந்த மாநிலத்துக்கு உரிய அறிவுரையை தாங்கள் (பிரதமர்) வழங்க வேண்டும். மேலும், எந்தப் பாசன திட்டங்களையோ, மின் திட்டங்களோ, குடிநீர் திட்டப் பணிகளையோ தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், கர்நாடகத்தின் சார்பில் முன்வைக்கப்படும் எந்தத் திட்டங்களுக்கும் தமிழக அரசின் ஆலோசனையைப் பெறாமல் மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறையோ, நீர்வளத் துறையோ அனுமதி அளிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதி நீர் ஒழுங்கு முறை குழுவையும் அமைக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்று செயல்படுத்தவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். எனவே, இந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து உடனடியாக சாதகமாக பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM O. Panneerselvam has written a letter to PM Modi asking him not to allow Karnataka to build dams across cauvery river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X