For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் அடுத்த கட்டத்திற்கு கர்நாடக அரசு நகர்ந்திருக்கிறது. புதிய அணை ரூ.5912 கோடியில் கட்டப்படும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா பெங்களூரில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கூறியிருக்கிறார்.

central government banned on Megathathu dam project

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு நடத்தி வந்த நாடகம் சித்தராமய்யாவின் இந்த பேச்சு மூலம் அம்பலமாகிவிட்டது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறி வந்தது. ஆனால், இப்போது மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சித்தராமய்யா கூறியுள்ளார்.

93 டி.எம்.சி கொள்ளவுள்ள மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் இரு மின்திட்டங்களின் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேகதாது அணையில் 400 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றால், அந்த அணையின் கொள்ளளவு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, மேகதாது அணை முதல்கட்டமாக 2000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேகதாது அணையில் 60 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, 49 டி.எம்.சி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை விட பெரியதாகும். குடிநீர் தேவைக்காக இவ்வளவு பெரிய அணையை கட்டத் தேவையில்லை. முழுக்க முழுக்க பாசனத் தேவைகளுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது என்பது கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மூலம் தெளிவாகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளின்படி காவிரி பாசனப் பரப்பை கர்நாடக அரசு அதிகரிக்க முடியாது. அதேபோல், மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் புதிய அணை கட்ட வேண்டுமானால் கடைமடை பாசன மாநிலத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களிலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவது நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

மேகதாது அணை கட்டுவது மட்டுமின்றி, பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகர், தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 490 ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான திட்டத்தை ரூ.1885 கோடி செலவில் செயல்படுத்தப்போவதாகவும் சித்தராமய்யா கூறியிருக்கிறார். 49 டி.எம்.சி கொள்ளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மட்டுமே இருக்கும் காலத்திலேயே தமிழகத்திற்கு உரிய அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை.

அவ்வாறு இருக்கும் போது அதைவிட அதிகமான அளவு தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுவதுடன், சுமார் 500 ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டுக்கூட தண்ணீர் கிடைக்காது. அதன்பின் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சை பாசன பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும்.

மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு பேசி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அம்மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே மேகதாது அணையை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை பாமக வலியுறுத்தி வருகிறது.

இச்சிக்கலில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுடன் கடமை முடிந்ததாக தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது.

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதையும், அவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள் கூட செயல்படுத்தப்படுவதில்லை என்பதையும் ஜெயலலிதா தலைமையிலான அரசு உணரவில்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.

இனியும் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடராமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அரசியல்ரீதியில் அழுத்தம் தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், மத்திய அரசும் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கக்கூடாது. இப்பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கடந்த 09.06.2015 அன்று அன்புமணிக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது என கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
pmk chief ramadoss has said, central government banned on Megathathu dam project
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X