மேலாண்மை வாரியமும் இல்லை... ஸ்கீமும் இல்லை.. என்ன சொல்லப் போகிறது "6 வார" வாய்சவடால் தமிழக பாஜக?

சென்னை; உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 6 வார காலமாகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 6 வாரங்களாக இதோ வரும்.. எப்படியும் வரும்..அதோ வரும் என வாய்சவடால் விட்டுக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர்கள் இப்போது என்ன பதில் சொல்வார்கள்?
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 6 வார காலக்கெடுவை விதித்தது உச்சநீதிமன்றம். ஆனால் கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து நிச்சயம் மத்திய பாஜக அரசு இந்த மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பதே தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது.

ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ, இப்போதுதானே தீர்ப்பு வந்துள்ளது.. 2 வாரம்தானே ஆகி இருக்கிறது.. 4 வாரம் இருக்கிறதே. இன்னும் 3 நாள் இருக்கிறதே. எப்படியும் மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என்றெல்லாம் எகத்தாளமாக பேசி வந்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனோ, காவிரி மேற்பார்வை குழு அல்லது மேலாண்மை வாரியம் ஏதோ ஒன்று அமைந்தாலும் அதை தமிழகம் வரவேற்க வேண்டும் என்றார்.
காவிரிக்காக தமிழக பாஜக ஒரு குழுவையும் போட்டு டெல்லிக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இந்த குழு நேற்று சந்தித்தது. அப்போது பேசிய இல. கணேசனும், மேலாண்மை வாரியம் அமையும்.. ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது என கூறினார்.
டிவி விவாதங்களில் பங்கேற்ற தமிழக பாஜக சவுண்ட் பார்ட்டிகளும் கூட ஏங்க இன்னமும் டைம் இருக்கிறதே... அதுக்குள்ள என்ன அவசரம்? நிச்சயம் மேலாண்மை வாரியம் அமையும் என எகத்தாளம் காட்டி பேசி வந்தனர். இப்போது மேலாண்மை வாரியமும் இல்லை... ஸ்கீமும் இல்லை.. குழுவும் இல்லை என கைவிரித்து பெரும் துரோகத்தை செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு.
6 வார காலமாக தவணை எடுத்து எடுத்து பேசிய தமிழக பாஜக இப்போது என்ன பதில் சொல்லும்? உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் காலில் போட்டு மிதித்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக மூச்சாவது விடுவார்களா? அல்லது வழக்கம் போல டெல்லிக்கு முட்டுக் கொடுத்து காவடி எடுப்பார்களா?
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!