For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஞ்சி நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை..வழக்கமான சாலையில் கிரிவல பக்தர்கள் தி.மலை செல்லலாம்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள திருவண்ணாமலை- திண்டிவனம் இடையிலான சாலையில் பேருந்துகள் செல்வது குறித்து நீதிமன்றங்கள் மாறுபட்ட உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தன.

இதனால், திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

girivalam

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி நாட்களில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளும் அதிக அளவில் வந்து செல்லும்.

அவ்வாறு வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் பயணித்துத்தான் திருவண்ணாமலைக்கு வர வேண்டும்.

ஆனால், இந்தச் சாலையைச் செப்பனிடும் பணி கடந்த சில ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்தச் சாலையில் பயணிக்கும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடையே, ஆனி மாதப் பௌர்ணமி புதன்கிழமை காலை 9.11 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை காலை 8.36 மணி வரை நீடிக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், செஞ்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இரு வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாக திண்டிவனம் வரையிலான சாலையில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். போக்குவரத்துக்கு தகுதியற்ற இந்தச் சாலையில் இயக்கப்படும் வெளியூர் வாகனங்களால் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, ஜூலை 3-ஆம் தேதி வரை இந்தச் சாலையில் வெளியூர் வாகனங்களை அனுமதிக்கத் தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

நேற்று பிற்பகல் வரை அனைத்துப் பேருந்துகளும் வழக்கமான வழித்தடத்திலேயே இயங்கின. இதையடுத்து, செஞ்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்போவதாக வழக்கறிஞர்கள், அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு திண்டிவனம், விழுப்புரம், வேட்டவலம் வழியாகவும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்தப் போக்குவரத்து மாற்றத்தால் சுமார் 35 கி.மீ. தொலைவுக்கு கூடுதலாகப் பேருந்துகளை இயக்க வேண்டிய நிலை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டது. அதேசமயம், இந்தத் தொலைவைக் கணக்கிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

வழக்கமாக கிரிவலம் வரும் பக்தர்கள், பௌர்மணிக்கு ஒரு நாள் முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்து விடுவர். அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே ஏராளமான வெளியூர் பயணிகள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கி விட்டனர். இதனிடையே, போக்குவரத்து மாற்றத்தால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும், புதன்கிழமை திருவண்ணாமலைக்கு எந்த வழித் தடத்தில் செல்வது என்றும் தமிழகம் முழுவதும் உள்ள கிரிவல பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, செஞ்சி நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செஞ்சி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு திருவண்ணாமலையில் இருந்து சென்னை, புதுச்சேரிக்கு வழக்கமான வழித் தடத்தில் செஞ்சி, திண்டிவனம் வழியாகவே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை, புதுச்சேரியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகளும் இதே வழித் தடத்தில் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் வரையிலான சாலையில் வாகனங்கள் செல்வது தொடர்பாக இரு வேறு நீதிமன்றங்கள் விதித்த மாறுபட்ட உத்தரவால் தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகள், கார்கள், வேன்களில் வந்த பக்தர்கள் பெரிதும் குழப்பம் அடைந்தனர். இவர்களின் குழப்பத்துக்கு விடையளிக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் விளக்கம் அளித்துள்ளன.

செஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் வழக்கமான பாதையில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாகவே திருவண்ணாமலைக்கு வரலாம். பக்தர்களின் அனைத்து வகையான வாகனங்களும் இந்தச் சாலையில் அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

English summary
Chennai High Court ban ginjee Court order. So that girivalam devotees can go in routine route to thiruvannamlai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X