For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநங்கைகள் நல வாரியம் மட்டுமல்ல, அதிமுக ஆட்சியில் எந்த வாரியமும் முறையாக செயல்படவில்லை: கருணாநிதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திருநங்கைகள் வாரியம் மட்டுமின்றி, அதிமுக ஆட்சியில் எந்த வாரியமும் சரியாக செயல்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர் நீதி மன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு விடக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

Consider quota for transgenders says Karunanidhi

இந்த வழக்குதான் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது திருநங்கைகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்தில் 3,328 திருநங்கைகளுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கல்வி வேலை வாய்ப்பில் அவர்கள் பயன்பெற முடியும். மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள இந்தப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் வழங்கினால் அவர்கள் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படாது என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14இல் திருநங்கைகளுக்கு பல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இது வெறும் ஏட்டளவில் தான் உள்ளது என்று வாதிட்டுள்ளனர். திருநங்கைகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக சமூக நலத் துறை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து ஆறு மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத் தக்கதும், பாராட்டத் தக்கதுமான செய்தியாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, திருநங்கைகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதை உணர்ந்து, அவர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்" ஒன்று 15-4-2008 அன்று தொடங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை கழக அரசு வழங்கியது.

திருநங்கைகள் நல வாரியத்தின் மூலமாக 3,878 பேர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களில் 2328 பேருக்கு அடையாள அட்டைகளும், 1238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களும், 585 பேருக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் கழக ஆட்சியில் வழங்கப்பட்டன.

மேலும் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் 2008-2009ஆம் ஆண்டில் 50 இலட்சம் ரூபாய் கழக அரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது. 2010-2011ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்த போது, அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததும்,

29-6-2013 அன்று நான் விடுத்த அறிக்கையில், "இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. தி.மு. கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்ட போது, திருநங்கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச்சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கையர்களைக் (Transgender) குறிக்கும் வகையில் T என்ற எழுத்து குறிப்பிடப்பட்டது.

முதன் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு கிரேஸ் பானு என்ற திருநங்கை; ப்ளஸ் 2 படித்த நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட போதிலும், பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியில் படிக்க தேர்வு பெற்றபோது, அதையும் அப்போதே பாராட்டி நான் அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

அதுபோலவே கடந்த ஆண்டு, திருநங்கை பிரித்திகா யாஷினி என்பவர், இந்தியாவில் திருநங்கையரில் முதல் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு பெற்றார். சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த போது, அவரது மனுவினைச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் நிராகரித்து விட்டது. அதனை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உயர் நீதி மன்றம் விசாரித்து இவரை அனைத்துத் தேர்விலும் கலந்து கொள்ள அனுமதித்தது.

அதற்குப் பிறகும் இவருக்குப் பணி வழங்கப்படவில்லை. அதையும் எதிர்த்து மீண்டும் நீதி மன்றம் சென்றார். உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து, "மனுதாரருக்கு சப் இன்ஸ்பெக்டர் பணி வழங்க வேண்டும். மூன்றாம் பாலினத்திற்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்படாததால் மனுதாரர் ஒவ்வொரு முறையும் இந்தக் கோர்ட்டை நாடவேண்டியிருந்தது. ஏற்கனவே போலீசில் மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் எதிர் காலத்தில் தேர்வின் போது மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடம் வழங்க வேண்டும். இதுபோன்ற பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியுமென்று கோர்ட் கருதுகிறது. எனவே, மனுதாரருக்கு (கே.பிரித்திகா யாசினி) போலீசில் பணியிடம் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலம் மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படும். அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க வழி ஏற்படும்" என்றெல்லாம் தீர்ப்பில் கூறியிருந்தார். அதனை அப்போதே நான் வரவேற்று, யாஷினியை வாழ்த்தியிருந்தேன்.

திருநங்கைகளின் நலன்களைக் காக்கும் விதமாக, மாநிலங்களவை கழக உறுப்பினர் தம்பி திருச்சி சிவா "திருநங்கைகள் உரிமைகள் மசோதா, 2014" ஒன்றினை மாநிலங்களவையில் தாக்கல் செய்து அந்த மசோதா நிறைவேற்றப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருநங்கைகள் நல வாரியம் மாத்திரமல்ல; அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நல வாரியமும் முறையாகச் செயல்படவில்லை.

2015-2016ஆம் ஆண்டுக்கான சமூக நலத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பின் செயல் திட்டத்தின்படி திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்விக் கடன் போன்றவை வழங்கப்பட வேண்டும். தகவல் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த பதிலில் இரண்டு பேருக்கு மட்டுமே அந்தக் கடன் வழங்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் மற்றொரு நீதிபதியும் சேர்ந்து திருநங்கையர் கோரிக்கையை தமிழக சமூக நலத் துறை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறைகளோடு ஆலோசித்து ஆறு மாதங்களுக்குள் உரிய முடிவினை எடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்திருப்பது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அ.தி.மு.க. அரசு என்ன முடிவினை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

English summary
Consider quota for transgenders even after High court order, says Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X