ஓகி.. காலம் கடத்தி வந்த எடப்பாடியின் ஆணவ அலட்சியப் போக்கு.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு முழுவதையும் அரசு கூற வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசிடம் கோரியுள்ள ரூ. 13,520 கோடி புயல் நிவாரண நிதியையும் அரசு பெறவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டு, சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ள ஒகி புயல் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரும் பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வந்திருக்கிறது. 2017 நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஏற்பட்ட மிக மோசமானதும், நூறாண்டில் காணாததுமான புயல் சேதங்களை பார்வையிட, 29 நாட்கள் கடந்த பிறகு வெகுசாவகாசமாக மத்தியக்குழு வந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த வீண் காலதாமதத்திற்கு குதிரை பேர அதிமுக அரசுதான் முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறுத்திட முடியாது.

Cyclone Ockhi: MK Stalin lashes CM Edappadi Palanisamy

கடும் புயலால் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து, தங்களின் குடும்பத் தலைவர்களையும், ரத்த சொந்தபந்தங்களையும் பறிகொடுத்து, கடலுக்குள் சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் திரும்பாத நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சோகத்திலும், துயரத்திலும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

14 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட அந்த மக்களை சென்று சந்தித்து, 21 நாட்களுக்குப் பிறகு மத்திய அரசிடம் பேரிடர் நிதி கோரிய - தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து காலத்தை கடத்தி வந்த முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியின் அலட்சிய ஆணவப் போக்கால் இன்றைக்கு சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்து முடங்கி விட்டன.

மீனவ மக்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கும் முழு நிவாரணம் கிடைப்பதில் வரலாறு காணாத - பொறுத்துக்கொள்ள முடியாத தாமதம் ஏற்பட்டு விட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தநிலையிலும் கூட, இன்னும் உண்மையிலேயே காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்பதைக் கண்டுபிடித்து வெளியிடாமல் குதிரை பேர அரசு தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறது.

ஒகி புயல் பாதிப்பினை முன்னிட்டு கன்னியாகுமரியில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற 5255 கோடி ரூபாயும், அங்கு கடல் அலை தடுப்புச் சுவர்கள் கட்டுவதற்கு 4047 கோடி ரூபாய், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சீரமைப்பு நிதியாக 4218 கோடி ரூபாய் என்று மொத்தம் 13520 கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டிருந்தாலும், மத்திய பா.ஜ.க. அரசு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் கூட இதுவரை ஒதுக்க முன்வரவில்லை என்பது கவலைக்குரியது.

ஆகவே, முன்பு காவிரிப் பிரச்சினை குறித்து விசாரிக்க வந்த மத்திய குழுவிடம் விவசாயிகள் தற்கொலையை மறைத்தது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போயிருக்கும் மீனவர்களின் எண்ணிக்கையை, ஒகி புயல் குறித்து விசாரிக்க வந்துள்ள மத்திய குழுவிடம் குதிரை பேர அரசு மறைத்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர், இன்னும் காணாமல் போயிருப்பவர்கள் எத்தனை பேர் என்ற முழு விவரங்களையும் மத்திய குழுவிடம் கொடுத்து, தமிழகம் கோரியிருக்கும் 13 ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதியை முழுமையாக உடனடியாக மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்.

காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்பதை உறுதி செய்து, அவர்களது குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை இனியும் தாமதம் செய்யாமல் அளித்து, அவர்களைக் காப்பாற்ற முன் வருவதுடன், மத்திய குழுவுடன் மூத்த தமிழக அமைச்சர்கள் இருவரை அனுப்பி, கன்னியாகுமரி மாவட்டத்தின் முழு சேத விவரங்களையும் எடுத்து விளக்கி, சிதிலமடைந்திருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள மீனவ மக்கள், ரப்பர், வாழை மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயிகள் அனைவருக்கும் உரிய முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம மற்றும் நகர்ப்புற சாலைகள், மின் கம்பங்கள் போன்று கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய குழுவும் வந்தோம் பார்த்தோம் போனோம் என்றில்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்போல் சகஜ வாழ்க்கை மீண்டும் தொடங்குவதற்கும், இனி எதிர்காலத்தில் இதுபோன்றதொரு பாதிப்பு ஏற்பாடமல் தடுக்கும் வகையிலும் முழு மத்திய நிதி கிடைப்பதற்கு ஏதுவாக மத்திய குழுவின் ஆய்வும் விசாரணையும் அமைந்திட வேண்டும் என்றும், அதற்குத் தகுந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை குதிரை பேர அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president MK Stalin has lashed CM Edappadi Palanisamy for his govt's laziness in Cyclone Ockhi and asked to spell out the truth about the real damages caused by the cyclone.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X