திருச்சி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் பொது இடத்தில் கட்டி வைத்து படுகொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி அருகே பொது இடத்தில் கட்டி வைத்து தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வருடத்தில் 25 தலித் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் திருப்பஞ்சிலி. இக்கிராமத்தில் வசித்து வந்த தலித் இளைஞர் கதிர் (எ) கதிரேசன் கடந்த 08.07.2017 அன்று தங்கராசு, சுரேஷ், பாஸ்கர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பலால் கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மணச்சநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 09.07.2017 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

சாதி மறுப்பு திருமணம்

சாதி மறுப்பு திருமணம்

களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது. திருப்பஞ்சிலி கிராமத்தில் வசித்து வந்த கதிர் (எ) கதிரேசன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கதிரேசனும் நந்தினியும் கதிரேசனின் பெற்றோர் மற்றும் சகோதர்களுடன் வசித்து வந்தனர்.

அத்துமீறல்

அத்துமீறல்

கதிரேசனின் தந்தை கணேசன் தப்படிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில் சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ் (37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்துவிட்டு பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர்.

குழாய் உடைத்ததாக கதை

குழாய் உடைத்ததாக கதை

கதிரேசனின் மனைவி நந்தினியும் தாயார் மல்லிகாவும் எதற்காக கதிரேசனை தேடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, என் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் சேதப்படுத்திவிட்டான். அவனை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் வெளியேறி இருக்கிறது.

கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

மறுபடியும் 30 நிமிடம் கடந்து வீட்டிற்கு வந்த அதே கும்பல் நந்தினியிடம், உன் புருசன் எங்கு இருக்கிறான்? மரியாதையாக சொல் என்று மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டு பகுதியில் கதிரேசன் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருக்கிறார். அதனை தெரிந்து கொண்டு அந்த பகுதிக்கு சென்ற தங்கராசும் சுரேசும் பாஸ்கரும் கதிரேசனை பிடித்து சாதி ரீதியாக இழிவாகப்பேசி செருப்புக் காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். இரும்புக் கம்பியால் அவரது முகத்தில் அடிக்க பற்கள் உடைந்தது.

கெஞ்சிய கதிர்

கெஞ்சிய கதிர்

அந்த பகுதிக்கு நந்தினியும் மல்லிகாவும் விரைந்துள்ளனர். நந்தினி அழுது கொண்டே, என் புருசனை அடிக்காதீர்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறார். அந்த கும்பல் நந்தினியின் முடியைப் பிடித்து இழுத்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். மல்லிகாவையும் கன்னத்தில் அறைந்துள்ளனர். பலத்த காயமடைந்த கதிரேசன் அழுதுகொண்டே, நான் எந்த குழாயையும் உடைக்கவில்லை என்று பரிதாபமாக கெஞ்சி அழுதிருக்கிறார்.

அடித்து நிர்வாணமாக்கி...

அடித்து நிர்வாணமாக்கி...

அந்த 3 பேரும் கதிரேசனை இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் இழுத்து வைத்து கயிற்றால் கட்டி அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றுள்ளனர். திருப்பஞ்சிலி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் கதிரேசனை அடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். அங்கு 15 பேர் கொண்ட கும்பல் கதிரேசனை சாதி சொல்லி இழிவாக திட்டிக் கொண்டே தாக்கியுள்ளனர்.

மக்கள் முன்னிலையில் தாக்குதல்

மக்கள் முன்னிலையில் தாக்குதல்

அதில் ஒருவர் கீழ்சாதி நாயிக்கு கட்சி கேக்குதா? என்று கூறி தாக்க, மற்றொருவர் எங்க பொண்ணுங்கள திருமணம் செய்து கொண்டால் எங்களுக்கு சரிக்கு சமமாக வந்துவிடுவாயா? என்று கூறி தாக்கியிருக்கின்றனர். இந்த தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. அந்த இடத்திற்கு நந்தினியும் மல்லிகாவும் சென்று அடித்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கதிரேசனை விட்டுவிடுங்கள் என்று கதறியிருக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டப்பட்டிருந்த கதிரேசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

பிணமாக கிடந்த கதிர்

பிணமாக கிடந்த கதிர்

இந்த சம்பவம் அறிந்ததும் கதிரேசன் தந்தை கணேசன் மணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவிக்க போலீசார் காலை சுமார் 9.00 மணிக்கு அந்த பகுதிக்கு வந்துள்ளனர். திருப்பஞ்சிலி கிராமத்தில் உள்ள தங்கராசுவின் தோட்டத்தில் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் கதிரேசன்.

குழாய்க்காக கொலை இல்லை

குழாய்க்காக கொலை இல்லை

ஏற்கனவே தங்கராசுவின் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் தான் உடைத்தார் என்று சந்தேகப்பட்டு ஒருமுறை கதிரேசன் தாக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் நடக்கின்ற முந்தைய நாள் கதிரேசனுக்கும் தங்கராசுவின் மகன் சுரேஷ், பாஸ்கர் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. குழாய் உடைக்கப்பட்டது என்று சந்தேகம் கொண்டு இந்த கொலை நடந்ததாக தெரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம்

சாதி மறுப்பு திருமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு துணிச்சலாக வாழ்ந்ததற்காகவும் தலித் மக்களின் உரிமைகளுக்காக அரசியல் ரீதியாக அப்பகுதியில் குரல் கொடுத்ததற்காகவும் வன்மம் கொண்ட இந்த சாதி கும்பல் குழாய் உடைப்பு என்கிற ஒரு போலியாக கதையை கட்டி கதிரேசனை கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மது ஒழிப்பிற்காகவும், தீண்டாமை எதிர்ப்பிற்காகவும், சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காகவும் 25 தலித் மனித உரிமை ஆர்வலர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கண்டனம்

கண்டனம்

சாதியப் படுகொலை என்பது சொந்த விரோதத்தின் அடிப்படையல் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. சாதி எதிர்ப்பு உணர்வினை வெளிப்படுத்துகிற இளைஞர்கள் மீதுதான் இத்தகைய கொடூர கொலைகள் நடக்கின்னறன. அதுமட்டுமல்ல கதிரேசனை 15 பேர் கொண்ட கும்பல் கடுமையாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. முக்கிய குற்றவாளிகள் 3 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மற்ற நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இது கண்டனத்திற்குரியது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.278/2017 பிரிவுகள் 294(b), 342, 506(2), 302 இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியின் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r) & (s), 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள்

• படுகொலை செய்யப்பட்ட கதிரேசன் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
• படுகொலையில் ஈடுபட்ட மூன்று முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மற்ற குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
• இறந்து போன கதிரேசனின் மனைவிக்கும், அவரது சகோதரருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
• மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்பிற்கென்று சிறப்பு சட்டத்தினை மத்திய அரசு இயற்றிட உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எவிடன்ஸ் கதிர் தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Dalit Activist was beaten to death near Trichy.
Please Wait while comments are loading...