For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் மாவட்டத்தை துவம்சம் செய்யும் மழை... 2 லட்சம் ஹெக்டேர் பாழ்- கண்ணீரில் விவசாயிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கடலூர்: யார் விட்ட சாபமோ தெரியவில்லை, சுனாமியோ, புயலோ, பெருமழை வெள்ளமோ எதுவென்றாலும் அதிகம் தாக்குவது கடலூராகத்தான் இருக்கிறது. கடந்த 8ம் தேதி தொடங்கிய பெருமழை இன்னமும் விட்டபாடில்லை. ஒருமாதமாகவே நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 500 கிராம மற்றும் நகரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகியுள்ளது. இதனால் விவசாயம் அடியோடு இந்தாண்டு மடிந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஒருமாதமாக பெய்து வரும் மழை நின்றபாடில்லை. இன்னும் ஒரு பெருமழை கடலூரை தாக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளதால் என்னவாகுமோ என்று அஞ்சத்தொடங்கியுள்ளனர் ஆயிரக்கணக்கான மக்கள்

குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், வடலூர், குள்ளஞ்சாவடி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இந்த பெருமழைக்கு வீடுகளை இழந்துபெரும்பாலும் தலித் சமுதாய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித் சமூக மக்கள் வசிக்கும் 8400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. , 20 சதவிகிதம் பிற சமுதாய மக்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது என்சிடிஹெச்ஆர் கணக்கெடுப்பு. ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்திய மக்களின் வாழ்க்கையில் மண் விழுந்திருக்கிறது.

நவம்பர் 8 முதல் மழை

நவம்பர் 8 முதல் மழை

கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வரலாறு காணாத வகையில் மாவட்டத்தின் இயல்பு நிலை முடங்கியுள்ளது. கடந்த மாதம் தீபாவளிக்கு முன்பு (8, 9 தேதிகளில்) தொடங்கிய கனமழை இன்று வரை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட 242 வெள்ளம் சூழும் பகுதிகளின் எண்ணிக்கை 380ஆக உயர்ந்துள்ளது.

சீறிப்பாயும் வெள்ளம்

சீறிப்பாயும் வெள்ளம்

தற்போது 3ம் கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் 500யை எட்டியுள்ளது. மழையின் சராசரி அளவு கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 7 நாட்களிலேயே 250 செ.மீட்டரை எட்டியுள்ளது. கடலூர் மாவட்ட வரலாற்றில் இதுவே மிக அதிக மழையாகும். இதனால் முக்கிய நீர்நிலைகளான வீராணம், வாலாஜா, பெருமாள் வெலிங்டன் ஏரிகளும், வெள்ளாறு, கெடிலம் ஆறு, பரவனாறு, தென்பெண்ணை ஆறுகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

சீறிப்பாயும் வெள்ளம்

சீறிப்பாயும் வெள்ளம்

ஒரு வார மழையால் வெள்ளாற்றில் 70 ஆயிரம் கனஅடியும், பரவனாற்றில் 29 ஆயிரம் கனஅடியும், கெடிலத்தில் 50 ஆயிரம் கனஅடியும், தென்பெண்ணையாற்றில் 30 ஆயிரம் கனஅடியும் என வெள்ள நீர் சீறிப்பாய்கிறது. இதனால் கடலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை, குள்ளஞ்சாவடி, ஆலப்பாக்கம் பகுதிகளில் சுமார் 500 கிராம மற்றும் நகர் பகுதிகளில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளக்காடான மாவட்டம்

வெள்ளக்காடான மாவட்டம்

திரும்பிய திசை எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. கடலூர் பீச்ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், ராதாகிருஷ்ணன்நகர், சாமிப்பிள்ளைநகர் ஆகிய பகுதிகளில் ரோட்டில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கே.என்.பேட்டை அசோக் நகர், வி.ஐ.பி.நகர், ராஜலட்சுமிநகர், குமாரப்பேட்டை சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே மழை வெள்ளம் புகுந்த புருஷோத்தமன்நகர், ராம்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அருகில் வசிக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெறிச்சோடிய கடலூர்

வெறிச்சோடிய கடலூர்

தொடர் மழையால் கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் மிக குறைந்த அளவிலேயே இருந்தது. கடலூர் நகரில் மட்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 14 முகாம்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4-வது நாளாக விடாமல் பெய்து வரும் மழையால் கடலூர் நகர மக்கள் விடைபெறாத சோகத்தில் உள்ளனர்.

அகதிகளான மக்கள்

அகதிகளான மக்கள்

அடிக்கடி வெள்ளத்தின் பாதிப்பில் தத்தளிக்கும் மாவட்ட மக்கள் இந்த அசாதாரண சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். 1 லட்சம் பேர் முகாம்களில் அகதிகள் போல் தஞ்சமடைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னல்கள் நிறைந்த வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி வரும் நிலையில் கால்நடைகளின் பங்கு இதில் மேலும் வேதனையடையச் செய்து வருகிறது.

விவசாயிகள் கண்ணீர்

விவசாயிகள் கண்ணீர்

இதுபோன்று கடந்த ஒரு மாத காலத்தில் மழை வெள்ளத்தால் 2 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் நாசமாகி விவசாயம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அடித்து வரப்படும் வெள்ள நீரில் மணல் மேடுகளாகவும், சாலைகள் அரித்து வரப்பட்டு விளைநிலங்களில் ஜல்லிகளாகவும் கொட்டிக்கிடக்கிறது.
வெள்ளத்தில் மூழ்கி அழுகிய பயிர்களைப்பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இடைவிடாத மழையால் மீண்டு வர முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கடலூர் மாவட்டத்தை பதம் பார்க்க போகுகிறது என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை மாவட்ட மக்களை தமிழகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்குமோ என கதிகலங்க வைத்துள்ளது.

விவசாய நிவாரணம்

விவசாய நிவாரணம்

முதற்கட்ட மழையை தொடர்ந்து 2ம் கட்ட மழையையும் சந்தித்து தற்போது 3ம் கட்டமாக முற்றிலும் விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே அதிகாரிகள் பார்வையிட்ட பகுதிகளுக்குக்கூட இதுவரை நிவாரணம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பல ஆயிரம் கடன் வாங்கி விவசாயம்செய்து வந்த விவசாயிகள் மழையால் அவையெல்லாம் வீணாய் போனதால் சுமார் 20 லட்சம் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தலித் மக்கள் புறக்கணிப்பா?

தலித் மக்கள் புறக்கணிப்பா?

இந்த மழை வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை வசதியற்ற முற்றிலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமங்களில் வசிக்கும் தலித் சமூகத்தினருக்கு நிவாரண பொருட்களோ, உணவோ சரிவர கிடைப்பதில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

English summary
Dalit households were hit the hardest by torrential rainfall and floods in Tamil Nadu’s Cuddalore district over the past month due to poverty and discrimination by upper caste villagers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X