For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயலிழந்துவிட்ட கூட்டுறவு சங்கங்கள்.. கண்டுகொள்ளாத தமிழக அரசு.. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துவிட்டது என்று மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் கூட்டுறவு அமைப்பின் ஊற்றுக்கண்ணாக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்து உள்ளன என்றும் அதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கறுப்புப் பணத்தை ஐம்பதே நாட்களில் ஒழிக்கப் போவதாகச் சொல்லி, மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக கூட்டுறவு அமைப்பின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் "கூட்டுறவு சங்கங்கள்" செயலிழந்து உள்ளன. வங்கி சேவைகளை கிராமத்தில் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கி வரும் 4490க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த சங்கங்களில் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள உத்தரவால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

Demonetization: Affected cooperative societies says M.K. Stalin

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்கவில்லை. உர விற்பனை கூட நடக்கவில்லை. அன்றாடத் தேவைகளுக்கு நகைகளை அடகு வைத்து கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் கிராம மக்களும் விவசாயப் பெருமக்களும், அந்த நகைக்கடனும் பெற முடியாமல் திண்டாடுகிறார்கள். இவை மட்டுல்ல; நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு மருந்தகங்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வீட்டு வசதி சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள் என்று ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்பே இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் தடையால் நிலைகுலைந்து நிற்கின்றன. இதை நம்பியிருக்கும் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், பால் முகவர்கள், வியாபாரிகள், அரசு பணியாளர்கள் என்று கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கும் பயனாளிகள் அனைவரும் பணம் பெற முடியாமல் பரிதவிப்பில் இருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள 3.28 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களில் 1 கோடியே 88 லட்சத்து 61 ஆயிரத்து 330 பேர் கிராமங்களில் இருக்கிறார்கள் என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதி செய்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் கிராமக் கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்புகளின் இயக்கமே தடைபட்டு, செயலற்று நிற்கின்ற இந்த நேரத்தில் கூட அதிமுக அரசு இது பற்றி கண்டுகொள்ளவோ கவலைப்படவோ இல்லை. கூட்டுறவுத் துறை அமைச்சரும் இது பற்றி மத்திய நிதியமைச்சருக்கோ, ரிசர்வ் வங்கிக்கோ கோரிக்கை விடுத்து இந்த நிலையை சீராக்க முயற்சி ஏதும் எடுக்கவில்லை. முதலமைச்சரின் பொறுப்புகளை கவனிக்கும் நிதியமைச்சர் திரு ஒ. பன்னீர்செல்வமும் கூட்டுறவு அமைப்புகளை செயல்பட வைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் "பண பரிமாற்றத்தின்" அடிப்படையில் இயங்கி வரும் கிராமப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் அப்படியே சரிந்து விழும் அபாயத்தில் சிக்கித் தவிக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள் எல்லாம் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை எதிர்த்துப் போராடி வந்தாலும், அதிமுக அரசோ அல்லது மத்திய அரசோ விவசாயிகளின் நலன் கருதி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது.

ஆகவே கிராமப் பொருளாதாரத்தை இயக்கும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு சகஜ நிலைமைக்குத் திரும்ப அதிமுக அரசு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய நிதியமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது அவசரமானது மட்டுமின்றி, அத்தியாவசியமான தேவையும் ஆகும். கூட்டுறவு சங்கங்களும் பண பரிவர்த்தனை செய்வதற்கு அனுமதி வழங்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கிக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து, கிராமங்களில் அன்றாட தேவைகளுக்காக தடுமாறிக் கொண்டிருக்கும் விவசாயிகள், நெசவாளர்கள், பால் வியாபாரிகள், முகவர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கும் அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Cooperative societies have been affected due to demonetization and take action for it asked M.K. Stalin to Tamil Nadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X