
எடப்பாடிக்கு எதிராக பகிரங்க போர்க்கொடி- தினகரன் கோஷ்டி தங்க தமிழ்ச்செல்வன் சட்டசபையில் வெளிநடப்பு!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் பகிரங்க போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி அரசைக் கண்டித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் இன்று திடீரென சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் ஆகியோரது தலைமையில் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். தினகரன் கோஷ்டியில் 34 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.

அமைச்சர் பதவி ஆசை
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அமைச்சர் பதவிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் தினகரன் சகவாசமே கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இருந்து வருகிறது.

பகிரங்க போர்க்கொடி
இந்த நிலையில் இன்று சட்டசபையில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தினகரன் கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் இன்று அதிமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெளிநடப்பு ஏன்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், தமது ஆண்டிபட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என 2 ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. சட்டசபையிலும் எனது இந்த கோரிக்கைக்கு எந்த ஒரு பதிலையும் அமைச்சரும் தெரிவிக்கவில்லை.

பரபரப்பு
இதனால்தான் அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறேன் என்றார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.