For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. திமுக நிச்சயம் எதிர்க்கும்.. மு.க.ஸ்டாலின்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திமுக எதிர்க்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவக்கல்வி சீர்திருத்தம் என்கிற பெயரில் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமையை பாஜக அரசு பறித்து வருகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா விவாதம் ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வரும்போது அதை எதிர்த்து தி.மு.க. ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்கும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 ஓரவஞ்சனை செய்யும் அரசு

ஓரவஞ்சனை செய்யும் அரசு

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கை: கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு, "மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்" என்று அனுமதி அளித்து, தனியார் மயத்திற்கு நடைபாவாடை விரித்திருப்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக, "கல்விக் கட்டணத்தில் அரசு தலையிட்டால் தனியார் கல்லூரிகள் வராது" என்று அந்த குழு குறிப்பிட்டிருப்பது, மருத்துவக் கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற ஓரவஞ்சனையை உறுதி செய்கிறது.

 மாநில உரிமை பறிப்பு

மாநில உரிமை பறிப்பு

இதுதவிர, புதிதாக அமைக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு, குறிப்பாக அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அறிக்கை கொடுத்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்பு தமிழக அரசின் சார்பில் ஆஜராகி கருத்துச் சொன்னவர்கள், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவக் கல்வி தொடர்பான உரிமை, மாநிலத்தின் பிரத்யேக உரிமை குறித்து ஏன் வலியுறுத்திப் பேசவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது.

 மத்திய அரசின் கை

மத்திய அரசின் கை

தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் கட்டளைகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதித்துள்ளது. இதுபோன்ற தொடர்ந்து மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.

 லைசென்ஸ் ராஜ் திட்டம்

லைசென்ஸ் ராஜ் திட்டம்

ஏற்கனவே ‘நீட்' தேர்வு மூலம் சமூகநீதியின் குரல் வளையில் காலை வைத்து நெரித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது "தேசிய அளவிலான பொதுத்தேர்வு" எழுதிவிட்டுத்தான் டாக்டர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது புதிய "லைசென்ஸ் ராஜ்" புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் டாக்டர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தெளிவாக உணர வேண்டும்.

 சமூக நீதி கேள்விக்குறி ?

சமூக நீதி கேள்விக்குறி ?

இதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு ‘நீட் தேர்வு' இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ்-2 தேர்வுக்குப் பிறகு ‘நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூகநீதி மீதான சம்மட்டி அடி என்றே தி.மு.க. கருதுகிறது. ‘சமவாய்ப்பு', ‘சமூகநீதி' என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தை எல்லாம் அர்த்தமற்றதாக்கி, மருத்துவக் கல்விக்கும், டாக்டர்களுக்கும், ஏழை - எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

 திமுகவின் எதிர்ப்பு குரல்

திமுகவின் எதிர்ப்பு குரல்

ஆகவே, ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு, போராடும் டாக்டர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா மாநிலங்களவையில் (மேல்-சபை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, தி.மு.க. சார்பில், இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் எடுத்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
DMK Leader Stalin condemns the National medical Commission Bill. He also added that the Central Government is to scrap the Medical aim of Rural People.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X