For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

356வது பிரிவு நீக்கம், இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு.. திமுக தேர்தல் அறிக்கை

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசில் திமுக பங்கேற்றதன் மூலம் பெற்றுத்தரப்பட்ட திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன் மாநில அரசுகளைக் கலைக்கும் 356வது பிரிவை அறவே நீக்குதல், மாநிலங்களே இடஒதுக்கீடு அளவை நிர்ணயித்தல், நாடு முழுவதும் சதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 100 பிரச்சனைகளை திமுக விவரித்துள்ளது.

சென்னையில் இன்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1. முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தென்னகத்தில் கண்மூடிக் கிடந்த திராவிட மக்கள் கண்திறக்கத் துணையாக 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனார் தொடங்கிய மதராஸ் ஐக்கிய லீக் (Madras United League) அமைப்பும், கல்லூரியில் படிக்கச் சேர்ந்த திராவிட மாணவர்கள் தங்கிப் பயில திராவிட மாணவர் விடுதியும்(Dravidan Student's Hostel);

karunanidhi

பின்னர் 1916ல் திராவிடர் உரிமைக் குரல் எழுப்ப சர்.பிட்டி.தியாக ராயரும் டாக்டர் நாயரும் டாக்டர் நடேசனாரும் இணைந்து உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியும்; தொடர்ந்து தேசிய இயக்கத்தில் நிலவிய உயர் வகுப்பார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட தந்தை பெரியார் 1925ல் தொடங்கிய சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமும்,

1938ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் எழுச்சி பெற்ற தமிழர்களின் தலைவராக உயர்ந்த தந்தை பெரியார் அவர்களின் தலைமையினாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனை யாற்றலாலும் உருக்கொண்ட இனஉணர்வு காரணமாக,

1944ல் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உருப்பெற்ற திராவிடர் கழகமும் என நுhறு ஆண்டுகளைக் கடந்த ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமை காக்கவும், தந்தை பெரியாரின் குறிக்கோளை எய்திடவும், தேவைப்பட்டதொரு ஜனநாயக இயக்கமாக 1949ல் அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம்.

கடந்த 65 ஆண்டுகளாக, மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உரிமைகளைக் காத்து, சாதி, சமயப் பகை நீங்கிய சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் பாடுபட்டு வருவதோடு, தமிழ் இன, மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாத்திட ஓயாது பணியாற்றி வருவது திராவிட முன்னேற்றக் கழகம்.

கொள்கைகளும் இலட்சியங்களும் பிரவாகம் எடுத்து - தடம் பிறழாமல், பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியாக தி.மு.கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

அறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி, 1969ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநில அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் ஜனநாயக நெறிகளைக் காத்திடவும், இந்தியா ஒரு வலுவான பொருளாதார அமைப்பினைப் பெற்றிடவும், சாதி,சமய பேதமற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடவும், உலக அளவில் நமது நாட்டின் மதிப்பினை உயர்த்திடவும் தலைவர் கலைஞர் அவர்களின் ஈடு இணையற்ற தலைமையில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றி வருகிறது தி.மு.கழகம்.

இந்தப் பேரியக்கத்தை உருவாக்கி, ஆல் போல் தழைக்க வைத்து, மக்களின் வற்றாத பேரன்பைப் பெறச் செய்த, தலைவனாக, ஆசானாக, வழிகாட்டியாக விளங்கி, இன்று வங்கக் கடற்கரை ஓரம், நீடுதுயில் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடம் நோக்கித் தொழுது,

ஆட்சியில் அமர்ந்துள்ள காலத்தில், மக்கள் நலனே தம் நலனெனக் கருதித் தீட்டிச் செயல்படுத்தப்படும் திட்டங்களால் மக்கள் மகிழ்ந்து பாராட்டும் நிலையில் இருந்தாலும்; எதிர்க்கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியின் அடக்குமுறை, அதிகார வேட்டை, அராஜகம், காரணம் இல்லாமல் நள்ளிரவில் தலைவர் வீட்டிலேயே புகுந்து தாக்குதல், சட்ட துஷ்பிரயோகம் ஆகியவைகட்கு ஆட்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தாலும், எல்லா நிலையிலும் "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'' என்று பணியாற்றும் தி.மு.கழகத்தை; புயல் நடுவிலும் அகல் விளக்கின் சுடர் அணையாமல், காக்கும் கரங்களைப் போல, கழகத்தைப் பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி கூறி இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறோம்.

36 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, நம் மொழி, இனம், பண்பாட்டின்மீது நடைபெற்றுவரும் நீண்டகாலப் படையெடுப்புகளை அம்பலப்படுத்தி, ஆதிக்கசக்தியினை முறியடித்திடத் தொய்வில்லாமல் தொடர்ந்த முயற்சியில், தனது கடைசிநாள்வரை ஒரு போராளியாய்த் திகழ்ந்தவரும்; அதே உணர்வோடு வளரும் நாடுகளின் உரிமைகள் பறிபோகாமல் அவற்றை "சியாட்டில்" மற்றும் "தோகா" உலக வர்த்தக மாநாடுகளில் பாதுகாத்துத் தந்தவரும்; உயர்ந்த அரசியல், பொருளியல், சமூகச் சிந்தனையாளராகத் திகழ்ந்து, இலட்சியக் கதிராக விளங்கிக் கொண்டிருந்தவரும்; நம் நெஞ்சில் என்றென்றும் நிறைந்து வாழும் முரசொலிமாறன் அவர்கள் இதுகாறும் தயாரித்து அளித்த தேர்தல் அறிக்கைகளில் முழங்கிய இலட்சியக் கனவுகளையும் நோக்கங்களையும் எதிரொலித்திடும் வண்ணமே இந்தத் தேர்தல் அறிக்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"மத நல்லிணக்க வரலாறு படைப்போம் மதச் சார்பற்ற ஆட்சி அமைப்போம்''

என்ற உன்னத இலட்சியத்தினை தி.மு.கழகம் மேற்கொண்டு, இந்திய நாட்டு மக்களுக்கு நேர்மையான ஆட்சியையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் கிடைக்கச் செய்வதற்கு உறுதி கூறுகிறது. வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தியாவை வளர்ந்த நாடுகளுள் முதன்மையானதாக உருவாக்குவதுடன், வறுமையை ஒழித்திடவும் அடிப்படை வசதிகளைப் பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முனைப்போடு இந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது.

2. மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.கழகத்தின் சாதனைகள்

1990ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சியிலே தான், கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தியதன் காரணமாக, சமூக நீதிக் காவலர், திரு. வி.பி. சிங் அவர்களால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது; காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; மாநிலங்களிடை மன்றமும் அப்போது தான் உருவானது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா அவர்களின் திருப்பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருப் பெயரும் சூட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 1996ல் ஐக்கிய முன்னணி அரசிலும் 1999ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் தி.மு. கழகம் பங்கு பெற்று, மத்தியில் நிலையான ஆட்சியை நிறுவுவதற்கும், கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம், சமூக நீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி, மொழி உரிமை, வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கழகம் பங்கேற்றிருந்த காலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துதல் - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்குதல் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினரின் நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தடுத்ததோடு, அயோத்திப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 2004ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று 2013ஆம் ஆண்டு வரை அமைச்சரவையிலும் இடம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் கழகம் ஆற்றியுள்ள பணிகள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகப் பணியாற்றிய முரசொலி மாறன் அவர்கள் தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், இந்திய வேளாண்மையைப் பாதுகாக்கப் பல மணிநேரம் தன்னுடைய கருத்துக்களை விரிவாக எடுத்து வைத்த பாங்கினை உலக நாடுகளே பாராட்டின.

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களை அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரம் பிரித்து, மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிறுவனங்களை ‘நவரத்னா' என்று அறிவித்ததோடு, ஏனைய பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரிதும் பாராட்டைப் பெற்றவையாகும்.

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான அறிவுசார் சொத்துரிமை வாரியத்தின் தலைமை அலுவலகத்தைச் சென்னையில் நிறுவச் செய்த பெருமையும் அவரையே சாரும்.

2004ஆம் ஆண்டு தொடங்கி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கழக அமைச்சர்களின் முயற்சியால் பல்வேறு வகைகளில் தமிழகம் நன்மை அடைந்திருக்கிறது.

- தமிழ், செம்மொழி என்ற பிரகடனம்; சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய அரசு நிறுவனம்.

- 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேதுசமுத்திரத் திட்டம்.

- கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் - 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு, மிகப் பிரம்மாண்டமான போக்குவரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்.

- சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம்.

- 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

- தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

- சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

- 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு.

- 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடக்கம்.

- 640 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம்.

- 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

- தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

- 1828 கோடி ரூபாய்ச் செலவில் தமிழகத்தில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

- சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

- திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

- சென்னைக்கருகில் 244 கோடி ரூபாய்ச் செலவில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்,

- திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்,

- கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்,

- திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்

- ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய மையங்கள்.

- சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

- தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு.

- நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட "சென்வாட் வரி" நீக்கம்.

- "பொடா சட்டம்" ரத்து.

- இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான மூன்றாம் தலைமுறை தகவல் தொழில் நுட்பத் திட்டம் (3.ஜி).

- அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்; (National E-Govenrnance Programme).

- 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

- மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்.

- மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு.

- இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

-இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

- இந்திய அஞ்சல் துறையை நவீன மயமாக்கி, பல்நோக்கு பயன்பாட்டோடு 15,000 அஞ்சல் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட "அம்புத் திட்டம்" (ஞசடிதநஉவ ஹசசடிற) தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் 300 அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.

இவ்வாறு தி.மு.கழகம் மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான பணிகளை ஆற்றியதோடு, கழகத்தின் அடிப்படை கொள்கைகளுக்காகக் குரல் கொடுக்கவும் தயங்கியதில்லை.

3. கூட்டாட்சி முறை (Federalism)

அந்த வகையில், முழுமையானதும் உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதும் (Wholesome and Genuine Federalism with complete autonomy for states), அதற்கேற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதும் தி.மு.கழகத்தின் கொள்கையாகும். இதன் அடிப்படையில் 1974ஆம் ஆண்டிலேயே இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை தி.மு.க. நிறைவேற்றியிருக்கிறது.

உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, எந்தக் கூட்டாட்சி அரசியலமைப்பிலும் இல்லாத வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356 பிரிவு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது. அந்தப் பிரிவு, அறவே நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும்.

மாறிவரும் உலகப் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அனைத்து உரிமைகளோடு செயல்படவும், மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறவும், தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடும்.

4. மதச் சார்பின்மை (Secularism)

அரசின் மதச் சார்பற்ற தன்மைதான், இந்தியாவில் வாழும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்து வைத்திருக்கும் உறுதியான பிணைப்பாகும். இதனடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை கொள்கையை மீறாத வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள உரிமைகளின்படி எந்த மதத்தையும் கடைப்பிடிப்பதற்கும், சுதந்திரமாகப் பரப்புவதற்கும் பொதுநலனுக்கு ஒப்ப வளர்ப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு என்பதில் கழகம் இன்று போல் என்றும் உறுதியாக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத உரிமை உள்ளிட்ட இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என்பதனால், அத்தகைய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்பதில் கழகம் உறுதி கொண்டுள்ளது.

மதவெறி காரணமாக எந்த மதத்தைச் சார்ந்தவர்களாலும், எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படுமானால் அதனை முறியடிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணை நின்று காப்பாற்றவும், தி.மு.க. தயங்காது.

5. சமூக நீதி (Social Justice)

சாதீய ஏற்றத்தாழ்வுகளை நீக்கச் சமூக நிலையிலும் மற்றும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்கிடுவதற்கு உருவான சமூகநீதி இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தி.மு.கழகம் பங்கேற்றிருந்த திரு.வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் அதுவரை மாநில அளவில் இருந்த இடஒதுக்கீடு முறை, தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசிலும் மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப் படுத்தப்படுகிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சியாகும். ஆனால், இதுகுறித்த உச்சநீதி மன்றத் தீர்ப்பால் சமூக நீதிக் கொள்கை முழுமையடைவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி இடஒதுக்கீடு அதிகபட்சம் ஐம்பது சதவிகிதம்தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் (Creamy Layer) என்று கருதப்படுவோர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத்திருத்தம் கொண்டுவர தி.மு.க. வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது போல, அனைத்து அதிகாரங்களையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் வழங்கிட உரிய அரசிலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும், தமிழகத்தில் தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைச்சகம் கண்டதைப் போல, மத்திய அரசிலும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீட்டு விகிதாசாரத்தை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதோடு, அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மாநில அரசு மேற்கொண்டுள்ள விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தி.மு.கழகம் வற்புறுத்தும்.

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகும். எனவே உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதற்கு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15 மற்றும் 16ல் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு முரணாக எவ்வித மாறுதல் செய்வதையும் திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. மேலும், பொருளாதார நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15 மற்றும் 16க்கு ஏற்புடையதல்ல. எனவே, அவ்வப்போது மாறுபடும் தன்மையுடைய பொருளாதார நியதிகளை (Economic Criteria) அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்வது, சமூக நீதி கோட்பாட்டிற்கு மாறுபட்டதாகையால், அதனை தி.மு.க. தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, அவற்றின் செயல்பாடுகளை ஒட்டுமொத்த நலன் (Holistic Welfare) பேணும் வகையில் செம்மைப்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X