For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''வேலைவாய்ப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு, நாடு தழுவிய சுயமரியாதைத் திருமணச் சட்டம்''

By Mathi
|

6.வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு

பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது மிகமிகக் குறைவானதாகும்.

மேலும், பொதுத் துறை நிறுவனங்கள், படிப்படியாக தனியார் மய மாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டாயம் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி வழங்குவது மட்டுமே சமூகநீதியின் நியாயமான, முழுமையான வெளிப்பாடாகும். இத்தகைய இடஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கிய குடியரசில் "Affirmative Action" நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

office

7. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு (Caste Based census)

தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோரை மட்டும் கணக்கெடுப்பு நடத்தியது. வறுமைக் கோட்டிற்கான அளவுகோல் அடிக்கடி மாறக் கூடியது.

எனவே, முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக எடுத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

8. மகளிருக்கு அதிகாரம் (Women Empowerement)

மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு

33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட போதிலும் இதுவரை விவாதித்து நிறைவேற்றப்படவில்லை. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நாடாளு மன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்கள் அதிக அளவில் இடம்பெற தி.மு.கழகம் பாடுபடும்.

1989-90இல் தி.மு. கழக அரசு அமைந்த போது, குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 12 ஆயிரத்திற்குக் குறைவாக உள்ள மாணவிகளுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க ஆணையிடப்பட்டது. மீண்டும் 1996இல் கழக அரசு அமைந்தவுடன் ஆண்டு வருமானம் 12 ஆயிரம் ரூபாய் என்பது 24 ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதைப் போல, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளுக்கு அகில இந்திய அளவில், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, கல்லூரிப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க தி.மு.கழகம் முயற்சி மேற்கொள்ளும்.

ஆதிதிராவிட - பழங்குடி இன - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட- வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களின் உடல்நலம் பேண ஊட்டச்சத்தினை (Nutiritional Status) மேம்படுத்துவதற்குத் "தனி சுகாதாரத் திட்டம்" உருவாவதற்கு தி.மு.கழகம் பாடுபடும்.

தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டதைப் போல, பெண்களுக்கு மத்திய அரசுப் பணிகளில்

30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் சமீபகாலங்களில் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் மகளிர் பாதுகாப்புக்கான உரிய சட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தி, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தந்திட தி.மு.கழகம் பாடுபடும்.

9. குழந்தைகள் நலன் (Child welfare)

குழந்தைத் தொழிலாளர் முறைகளும் , சுமங்கலித் திட்டமும் தடை செய்யப்பட வேண்டும். 1986ல் கொண்டு வரப்பட்ட குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் தேவையான திருத்தம் செய்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

வளர் இளம் பருவத்தினருக்கு (12-18 வயதினருக்கு) கல்வி, நல்வாழ்வு, ஊட்டச் சத்து, உடற்கல்வி, வன்முறை-சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் தொழிற் பயிற்சி குறித்து சிறப்புக் கொள்கை மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

போதுமான அளவு நிதிவளம், பொருள்வளம் மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்து குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். அதற்காக, மத்திய நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் 10 விழுக்காடு நிதியினை, குழந்தை உரிமைகளுக்கும், நலனுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

10. மாற்றுத் திறனாளிகள் (Differently Abled)

தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு உடல் ஊனமுற்றோருக்கென்று ஒரு தனித் துறையை உருவாக்கியதோடு, அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை உணர்ந்து, அவர்களை "மாற்றுத் திறனாளிகள்" என்று அறிவித்தது. மேலும், அவர்களுக்குப் பல்வேறு வகைச் சிறப்பு சலுகைகள் வழங்கிட ஏதுவாக, தனியாக நலவாரியமும் உருவாக்கியது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், பல அரசுத் துறைகளும் - பொது நிறுவனங்களும் இந்த இடஒதுக்கீட்டினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

போக்குவரத்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வந்து போக வசதியாக, அனைத்து பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

11. அரவாணிகள் (Transgenders)

இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாக செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும்.

மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

12. முதியோர் நலன்

2020இல் உலகில் 1000 மில்லியன் முதியோர் இருப்பர் என்றும், அதில் இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் முதியோர் இருப்பர் என்றும், உலகச் சுகாதார நிறுவனம் கணித்து அறிவித்துள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள இந்தப் புள்ளி விவரத்தைக் கருத்தில் கொண்டு, முதியோர் நலன் முழுமையாகப் பேணப்படும் வகையில் புதிய கொள்கை ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம். முதியோருக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு, பராமரிப்பு உதவிகள், மருத்துவப் பாதுகாப்பு போன்றவற்றை தங்குதடையின்றி வழங்குவதற்கேற்ப முதியோர் கொள்கை வகுக்கப்படுவதை உறுதி செய்வோம்.

13. அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Respect Marriage Act)

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச்சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதை திருமணச் சட்டம் 1968ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்து திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

14. சிறுபான்மையோர் நலன் (Minorities Welfare)

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர் கிறித்தவ மதத்திற்கு மாறும் போது, அவர்கள் சமூக தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பழங்குடியினராகவும் கருதப்படுவது தொடர்ந்தாலும் அவர்கள் இதுவரை பெற்று வந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அமைத்த நீதியரசர் சச்சார் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனக் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும், பழங்குடியினராகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

அதுபோலவே, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை ஏற்று, சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும், சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பட்டியலின சாதியினருக்கு இருப்பது போல் சிறப்பு உட்கூறு திட்டம் (Special Component Plan) இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அத்துடன், சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்டத்தில், மொத்த திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்படும் தொகை 19 விழுக்காடாக உயர்த்தப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய "தடா, பொடா" போன்ற சட்டங்கள் ஆளுங்கட்சியால், அரசியல்வாதிகள் மீதும் - சில குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் ஏவிவிடப்பட்டு வந்திருக்கின்றன. இந்நிலையை புரிந்து மேற்கண்ட சட்டங்கள் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Unlawful Activities prevention Act) 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X